கைக்கலப்பில் ஈடுபட்டு வழக்கில் சிக்கியிருந்த பென் ஸ்டோக்ஸ், தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளதால் இங்கிலாந்து அணிக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டது பல்வேறு விமர்சனங்களைக் கிளப்பின. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு வழக்கு காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை. சென்ற ஆண்டு 25-ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி நிறைவடைந்தபோது, நைட் கிளப் ஒன்றிற்கு சென்ற பென் ஸ்டோக்ஸ் அடிதடி சண்டையில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. இதனை சிசிடிவி காட்சிகளும் உறுதிசெய்ய, பென் ஸ்டோக்ஸ் மீது வழக்குப் பாய்ந்தது.
இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி முடிந்த கையோடு, வழக்கை எதிர்கொள்ள பென் ஸ்டோக்ஸ் சென்றுவிட்டார். தற்போது அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதால், மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பென் ஸ்டோக்ஸுக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட கிறிஸ் வோக்ஸ், பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்தி அதிரடி காட்டினார். சதமடித்ததோடு, முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அணியில் முக்கியமான பொறுப்பான ஆல்ரவுண்டருக்கு இந்த இருவரில் யாரைத் தேர்வுசெய்வது என்று தெரியாமல், இங்கிலாந்து அணி தலைவலியில் உள்ளது.