ஐபிஎல் தொடரில் ஏற்கனவே 8 அணிகள் விளையாடிவரும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டது. இதனைத்தொடர்ந்து, அண்மையில் இரண்டு புதிய அணிகள் ஏலம் விடப்பட்டன. இந்த அணி ஏலத்தில், சிவிசி கேபிட்டல்ஸ் அகமதாபாத் அணியை ஏலம் எடுத்தது.
ஆனால், சிவிசி கேபிட்டல்ஸ்க்கு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுடன் தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, இந்தப் புகாரைப் பிசிசிஐயின் சட்டக்குழு விசாரித்துவந்தது. இந்நிலையில் இந்த சட்டக் குழு, அகமதாபாத் அணியின் உரிமையாளராக தொடர சிவிசி கேபிட்டல்ஸ் நிறுவனத்திற்கு அனுமதியளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவிசி கேபிட்டல்ஸ் என்ற முதலீட்டு நிறுவனத்திடம் ஐரோப்பிய நிதியம் மற்றும் ஆசிய நிதியம் என்ற இரண்டு நிதியம் இருப்பதாகவும், இதில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் உள்ள சூதாட்ட நிறுவனங்களில், சிவிசி கேபிட்டல்ஸ் தனது ஐரோப்பிய நிதியதிலிருந்து முதலீடு செய்திருப்பதாகவும், சூதாட்ட நிறுவனங்களில் ஆசிய நிதியத்திலிருந்து முதலீடு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், சிவிசி கேபிட்டல்ஸ் அகமதாபாத் அணியில் ஆசிய நிதியத்திலிருந்து முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பிசிசிஐ, சிவிசி கேபிட்டல்ஸ்க்கு விரைவில் அதிகாரபூர்வமாகப் பச்சை கொடி காட்டவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.