உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதி ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இன்று (16.11.2023) இடையே நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். தொடக்க ஆட்டக்காரர் டி காக் 3 ரன்னில் வெளியேற, கேப்டன் பவுமா 0 என மீண்டும் சொதப்பினார். டுசைன் 6, மார்க்ரம் 10 என வெளியேற 24-4 என தடுமாறியது. அடுத்து வந்த டேவிட் மில்லர், க்ளாசென் இணை நிதானமாக விளையாடி, அணி ஓரளவு நல்ல ஸ்கோர் பெற உதவினர்.
சிறப்பாக ஆடிய டேவிட் மில்லர் சதமடித்து 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருக்கு கை கொடுத்த க்ளாசென் 47 ரன்களும், கோட்ஸி 19 ரன்களும் எடுத்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹேசில்வுட், டிராவிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஹெட், வார்னர் சிறப்பான துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு அந்த இணை 60 ரன்கள் எடுத்தது. வார்னர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்மித் நிதானமாக ஆடத் தொடங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஹெட் அரை சதம் அடித்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார். லபுசேன் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேக்ஸ்வெல் 1 ரன்னில் வெளியேறினார். பொறுமையாக ஆடிய ஸ்மித் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது.
இங்லிஸ், ஸ்டார்க் இணை வெற்றியை நோக்கி நடைபோடத் தொடங்கிய நிலையில் இங்லிஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்க அணிக்கு மேலும் 3 விக்கெட்டுகள் தேவைப்பட, ஆஸ்திரேலிய அணிக்கோ 20 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டார்க், கேப்டன் கம்மின்ஸ் இணை நிதானமாக ஆட ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்க அணி சார்பில் கோட்ஸி, ஷம்ஸி தலா 2 விக்கெட்டுகளும், மார்க்ரம், ரபாடா, மஹராஜ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ட்ராவிஸ் ஹெட் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் 8 ஆவது முறையாக ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வரும் நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்து விளையாட உள்ளது.
மற்ற ஆட்டங்களில் எல்லாம் சிறப்பாக விளையாடி உலகக் கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி அவ்வளவு சிறப்பாக விளையாடாது எனும் வரலாறு தொடர்கிறது. 1999 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதியில், இதே ஆஸ்திரேலிய அணியிடம் தென்னாப்பிரிக்க அணியின் ஆட்டம் டையில் முடிந்தது. லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெற்றிருந்ததன் அடிப்படையில், ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 213 ரன்களை எடுத்தது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக 213 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்தது சுவாரசியமாக அமைந்தது. 2007 உலகக் கோப்பை அரையிறுதியிலும் ஆஸ்திரேலிய அணியிடம், தென் ஆப்பிரிக்க அணி தோற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
- வெ.அருண்குமார்