ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் 24வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
இதில் டாசை வென்ற ஆஸ்திரேலியஅணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியஅணிக்கு கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஸ், இந்த ஆட்டத்தில் 9 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் இணைந்த வார்னர் - ஸ்மித் ஜோடி நெதர்லாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. ஸ்மித் 71 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த லபுசேன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 62 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ஜாஸ் இங்கிலீஷ் 14 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய வார்னர் ஒரு நாள் போட்டிகளில் தனது 22 வது சதத்தை பதிவு செய்தார். வார்னர் 104 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் நெதர்லாந்து பந்துவீச்சை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக பறக்க விட்டார். 40 பந்துகளில் சதத்தைக் கடந்த மேக்ஸ்வெல், உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 9 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 106 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் வேன் பீக் 4 விக்கெட்டுகளும், மீக்கெரென் 2 விக்கெட்டுகளும், டுட் 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி, ஆஸ்திரேலியாவின் வேகம் மற்றும்சுழல் எனும் இருமுனை தாக்குதலில் இருந்து மீள முடியாமல் 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 309 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற சாதனையைப் படைத்தது.இந்திய அணி இலங்கையை 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சதமடித்த மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- வெ.அருண்குமார்