Skip to main content

ஆசியக் கோப்பை இறுதி போட்டி; 50 ரன்களில் சுருண்ட இலங்கை அணி!  

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

Asia Cup Final; Sri Lankan team wrapped up in 50 runs!

 

ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 30 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் லீக் சுற்றின் முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன. 

 

இதில், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதியாகி இன்று இலங்கையில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் மோதிவருகின்றன. இந்த இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிவருகிறது.  

 

இந்த ஆட்டத்தில் இலங்கை அணி துவக்கம் முதலே விக்கெட்களை இழந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்தது. இந்நிலையில், இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து தனது பத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இதில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆறு விக்கெட்களை எடுத்தார். 

 

இதனையடுத்து இந்திய அணி 51 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாட இருக்கிறது. ஆசியக் கோப்பையின் நடப்பு சாம்பியன் இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

விண்டோஸ் மென்பொருள் முடங்கியது!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
Windows software error

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் விண்டோஸ் (Windows) மென்பொருள் முடங்கியுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பத்துறை, வங்கி, விமானம், ரயில், மீடியா உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிரவுட்ஸ்ட்ரைக் (CrowdStrike) என்ற அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் விண்டோஸை புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ப்ளு ஸ்கிரின் எரர் ( Blue Screen Error) ஏற்பட்டுள்ளதால் பயனாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இதன் காரணமாக சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட உலகம் முழுவதும் விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா, யுனைடட் உள்ளிட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு விமான சேவைகள் தாமதமாகும் என விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உலகளாவிய விண்டோஸ்  செயலிழப்பு தொடர்பாக மைக்ரோசாப்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களுடன்  தொடர்பில் உள்ளது. இந்த செயலிழப்புக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீண்டும் நீதிமன்றக் காவல் விதிப்பு!

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Rameswaram Fishermen remanded in court

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இத்தகைய சூழலில் தான கடந்த ஜூன் 22 ஆம் தேதி (22.06.2024) காலை வழக்கம் போல் ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட விசைப்படகில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி கச்சத்தீவு - நெடுந்தீவு இடையே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரைக் கைது செய்தனர். 

Rameswaram Fishermen remanded in court

அதாவது கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கைதான 22 மீனவர்களையும் காங்கேசன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அதன் பிறகு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மேலும் தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்து பறிமுதல் செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரைக் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதே சமயம் தமிழக மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது கடந்த 5ஆம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் 2வது முறையாக மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ஜூலை 18 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று (18.07.2024) மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூன்றாவது முறையாக மீண்டும் ஜூலை 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.