ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 30 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் லீக் சுற்றின் முடிவில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தி இந்தியா முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற நிலையில், இரண்டாவதாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் அணி யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி கடந்த 14 ஆம் தேதி இலங்கை - பாகிஸ்தான் இடையே நடைபெற்றது. போட்டி சமனில் முடிந்த நிலையில், DLS முறைப்படி இலங்கை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. ஆசிய கோப்பையில் இந்திய அணி அதிகபட்சமாக 7 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. இலங்கை 6 முறை வென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கிடையே நடந்த இறுதிப்போட்டிகளில் இந்தியா 5 முறையும், இலங்கை 3 முறையும் வென்றுள்ளது.
இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என இரண்டும் வலுப்பெற்றுள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கில் முக்கிய வீரர்களான ரோஹித், கோலி, கில், ராகுல் ஆகியோர் ஃபார்முக்கு திரும்பி இருப்பதாலும், பவுலிங்கில் பும்ரா, குல்தீப் கலக்கி வருவதாலும் இந்திய அணிக்கே வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் சொந்த மண் மற்றும் இளம் வீரர் வெல்லாலகேவின் மாயாஜாலப் பந்து வீச்சு கொடுத்த நம்பிக்கையில் இலங்கை அணியும் புதிய உத்வேகத்துடன் களம் இறங்குகிறது. வங்கதேச அணிக்கு எதிராக கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அக்சர் படேல் காயம் காரணமாக விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சாம்பியனான இலங்கையை வீழ்த்தி ஆசிய கோப்பையில் அதிக முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணி என்ற வரலாற்றைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியாவும், நடப்பு சாம்பியன் என்ற பெருமையைத் தக்கவைத்துக்கொள்ளவும், இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று அதிக முறை சாம்பியன் என்ற இந்திய அணியின் சாதனையை சமன் செய்யவும் போராடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. உலகக்கோப்பை - 2023 தொடருக்கு முன் நடக்கும் போட்டி என்பதால் வெற்றியுடன் முடிக்க இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையே இவ்விரு அணிகளும் ஆசிய கோப்பை 2023ன் இறுதி போட்டியில் விளையாடவுள்ளது. இந்த ஆட்டம் பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.