கிரிக்கெட் வர்ணனையின் போது, என்னுடைய பெயரை நீங்கள் பயன்படுத்தியது வெறுக்கத்தக்க வகையில் உள்ளது என விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய ஐ.பி.எல் போட்டி, நேற்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. அதில் பெங்களூரு அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி 132 ரன்கள் குவித்தார். கே.எல்.ராகுல் கொடுத்த, இரண்டு கேட்ச்சையும் விராட் கோலி தவறவிட்டதே, பெங்களூர் அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்நிலையில், போட்டியின் போது வர்ணனையாளராகச் செயல்பட்ட கவாஸ்கர், விராட் கோலியைப் பற்றி வர்ணனை செய்கையில் அவரது மனைவியான அனுஷ்கா ஷர்மாவின் பெயரைப் பயன்படுத்தினார். இது சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அனுஷ்கா ஷர்மா, கவாஸ்கரின் இந்தச் செயலைக் கண்டித்துள்ளார்.
இது குறித்து, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் எழுதியுள்ள பதிவில், "கவாஸ்கர், உங்களுடைய பேச்சு வெறுக்கத்தக்க வகையில் உள்ளது. கணவரின் விளையாட்டில் நடக்கும் விஷயத்திற்காக, மனைவியை எதற்குக் குற்றம் சாட்டுகிறீர்கள். கடந்த காலங்களில், வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மீது நீங்கள் மரியாதை வைத்திருப்பீர்கள் என்று உறுதியாக நினைக்கிறேன். அந்த மரியாதையை எனக்கும், என் கணவருக்கும் கொடுக்க வேண்டும் என்று ஏன் நினைக்கவில்லை. இப்போது 2020 -ஆம் ஆண்டு நடக்கிறது. இந்த ஒரு விஷயம் மட்டும் இத்தனையாண்டு காலங்களில் மாறவில்லை. என்னை கிரிக்கெட்டிக்குள் இழுப்பது எப்போது நிறுத்தப்படும்? நீங்கள் உயரங்களைத் தொட்ட பெரிய மனிதர். நீங்கள் இந்தச் செயலைச் செய்தீர்கள் என்று கேள்விப்பட்டவுடன், என் மனதிற்குள் தோன்றிய விஷயங்களை நான் தெரியப்படுத்தியுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, கவாஸ்கரை வர்ணனையாளர்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் பி.சி.சி.ஐ-யிடம் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.