டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேற்று (04.07.2024) டெல்லி வந்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தின் வெளியே திரளாகக் காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காலை உணவளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியிலிருந்து புறப்பட்டு மும்பை வந்தடைந்தனர். அப்போது இந்திய அணியினர் வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் (WATER SALUTE) அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தனது வெற்றி அணிவகுப்பை மும்பையில் தொடங்கினர். இந்திய கிரிக்கெட் அணியின் வருகைக்காக மும்பை மரைன் டிரைவில் பொதுமக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு மரைன் டிரைவிலிருந்து வான்கடே மைதானம் வரை நடைபெற்றது. இதனையடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கொண்ட நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய்க்கான காசோலையை பிசிசிஐ அதிகாரிகள் வழங்கினர். இதற்கிடையே இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.) அதிகாரிகள் சிறப்பாக வரவேற்பளித்தனர்.
இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டார். இதனையடுத்து டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.11 கோடி பரிசுத் தொகையை மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. முன்னதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “நான் நேற்று இந்திய அணியை வரவேற்றேன். இன்று ரோஹித் சர்மா இங்கு வந்தார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் உலகக் கோப்பையை வென்ற வீரர் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் அவர் மும்பையைச் சேர்ந்தவர். எங்கள் வீரர்கள் அனைவரும் நேற்று மும்பையில் இருந்த போது நான் வரவேற்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.