Skip to main content

‘நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்துவிட்டது’ - வினேஷ் போகத் எடுத்த அதிர்ச்சி முடிவு! 

Published on 08/08/2024 | Edited on 08/08/2024
All hopes are broken Vinesh phogat shocking decision

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உள்ளடக்கிய இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தார். இத்தகைய சூழலில் தான் வினேஷ் போகத் அதிக எடை காரணமாகப் பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்தப் போட்டியில் இருந்து நேற்று (07.08.2024) தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்திருந்த தகவலின்படி, ‘மகளிர் மல்யுத்த 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. குழுவினரின் சிறந்த பயிற்சிகள் இருந்தபோதிலும், அவர் 50 கிலோவுக்கு மேல் சில கிராம் (100 கிராம்) கூடுதல் எடையுடன் இருந்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. நான் தோற்றுவிட்டேன். உங்களின் கனவு, என்னுடைய தன்னம்பிக்கைகள் அனைத்தும் இன்று உடைந்துவிட்டது. எனக்கு இதற்குமேல் போராட வலிமை இல்லை. உங்கள் அனைவருக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன். என்னுடைய இந்த முடிவிற்காக நீங்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். முன்னதாக அவரது தகுதி நீக்க முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.