Afghanistan shocked Sri Lanka; Another milestone in the World Cup

Advertisment

உலகக்கோப்பையின்30ஆவது லீக் ஆட்டம் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே புனேவில் இன்று நடைபெற்றது. இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இருந்ததால், இந்த ஆட்டம் பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கியது.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷஹிதி முதலில் பந்து வீசத் தீர்மானித்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய நிசங்கா, கருணரத்னே இணை சிறப்பான துவக்கம் தரவில்லை. கருணரத்னே 15 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்பு நிசங்கா உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் குஷால் மெண்டிஸ் நிதானமாக ஆடினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தநிசங்கா 46 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த சமரவிக்ரமா நிதானமாக ஆடினார் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் மெண்டிசும் 39 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். சமர விக்கிரமாவும் 36 ரன்களில் அவுட் ஆனார், அசலங்கா 22, தனஞ்செயா 14, அனுபவ மேத்யூஸ் 23 என அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத்தவறினர். இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர்களில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசியஃபரூக்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முஜீப் 2 விக்கெட்டுகளும், அஸ்மத்துல்லா மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணிக்கு அதிர்ச்சி தரும் விதமாக தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். பின்பு மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இப்ராஹிம், ரஹ்மத் சா இணை நிதானமாக ஆடியது. பொறுமையுடன் ஆடிய இப்ராஹிம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஷஹிதியுடன் ரஹ்மத் ஷா இணைந்தார். சிறப்பாக ஆடிய ரஹ்மத் ஷா அரைசதம் கடந்து 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்மத்துல்லா கேப்டன் ஷஹிதி உடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் ஷஹிதி 58 ரன்கள் எடுக்க, அதிரடியாக ஆடிய அஸ்மத்துல்லா 63 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 45.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 242 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தானின் அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. நான்காவது தோல்வியை சந்தித்த இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெற அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, பிறகு மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே அரையிறுதி வாய்ப்பு பெறக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisment

ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஃபரூக்கி தேர்வு செய்யப்பட்டார். ஆப்கானிஸ்தான் அணி ஒரு உலக கோப்பையில் தொடர்ச்சியாக இரு வெற்றிகள் பெறுவது இதுவே முதல் முறையாகும். உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியை வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். இன்னும் இரண்டு ஆட்டங்களில் வெற்றிகள் பெற்றால், ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- வெ.அருண்குமார்