13-ஆவது ஐபிஎல் தொடரானது அமீரகத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அதிரடி வீரரான மேக்ஸ்வெல், கே.எல்.ராகுல் வழிநடத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல், 13 போட்டிகளில் விளையாடி 103 ரன்கள் மட்டுமே குவித்தார். மேலும், அதிரடிக்கு பெயர் பெற்ற இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. இதனையடுத்து, அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் தன்னுடைய யூ-டியூப் சேனலில் பேசும்போது, மேக்ஸ்வெல்லை விலையுயர்ந்த சியர்ஸ்லீடர் என்றும், அதிகம் ஊதியம் பெற்று விடுமுறையில் இருப்பவர் என்றும் குறிப்பிட்டார். சேவாக்கின் இந்தக் கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்த மேக்ஸ்வெல், "என்னை விரும்பாததை சேவாக் வெளிப்படையாகக் கூறிவிட்டார். அவர் கூற விரும்புவதைக் கூற அவருக்கு உரிமை உள்ளது. நான் அதை கடந்து போகிறேன். இதை ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறேன். இது போன்ற விமர்சனங்களைக் கையாள்வதில் நான் கைத்தேர்ந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்" எனக் கூறினார்.