Skip to main content

பெண்கள் தாய்மையடைவதைத் தடுப்பது எது? வழியெல்லாம் வாழ்வோம் - #20

Published on 20/07/2018 | Edited on 21/07/2018
pregnant ladyஊட்டச்சத்து குறைபாட்டால் தாய்மையடைவதில் ஏற்படும் சிக்கல்கள்

"ஈன்று புறந்தருதல் அன்னைக்கு கடனே" என்று மகப்பேற்றை கடமையாவே கருதிவிட்ட ஒரு சமூக சூழலில் உள்ளதால், தாய்மையடைதல் பெண்களின் மனதளவிலேயே ஒரு மிகப்பெரும் சமூகக் கடமையென்றே பதிக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் திருமணமாகி சில நாட்களுக்குள்ளேயே தாய்மையடையாவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலும் சொல்லில் அடங்காது. இந்த வழியெல்லாம் வாழ்வோம், ஊட்டச்சத்துக்கள் குறைபாடு காரணமாக தாய்மையடைவதில் ஏற்படும் சிக்கல்கள் பற்றி மட்டுமே பேசவிளைகிறது. வேறெந்த காரணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை.

தாய்மையடையத் தேவையான அடிப்படை ஊட்டச்சத்துக்கள்

துத்தநாகச் சத்து

இனிய இல்லறம் அமைய ஆண், பெண் இருவருக்கும் முக்கியத்தேவை துத்தநாகச்சத்து. கடல் சிப்பியில் அதிக அளவு துத்தநாகச் சத்து உள்ளது. இதை உண்ண பிடிக்காதவர்கள் சம்பா அரிசி, பச்சை நிற கீரைகள், முழுக் கோதுமை பிரட் இவற்றை உட்கொள்ளலாம். இவற்றிலெல்லாம் அதிக அளவு துத்தநாகச்சத்து காணப்படுகிறது.

வைட்டமின்கள்

வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் தாய்மையடையும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் ஆட்டு ஈரல், முட்டை, பால் பொருட்கள், கேரட் போன்றவைகளை அளவோடு உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். நாம் உண்ணும் உணவில் தினமும் 500 முதல் 1,000 மில்லி கிராம் வரை வைட்டமின்-சி சத்து உடலில் சேரவேண்டும். ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெரி, சிட்ரஸ் நிரம்பியுள்ள எலுமிச்சை போன்ற பழங்கள் வைட்டமின்-சி நிறைந்தவை. அவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

 

mothers loveமாங்கனீஸ் சத்து

உடம்பில் ‘மாங்கனீஸ்’ குறைந்தால், குழந்தை பெறும் வாய்ப்பும் குறையத்துவங்கும். மாங்கனீஸ் சத்து, உடலின்   ஈஸ்ட்ரோஜன் சுரப்புக்கு நல்லது. குறிப்பாக, பெண்களின் தாய்மைபேற்றினை இது ஊக்குவிக்கும். கீரை, முழுகோதுமை, அன்னாசிப் பழம், பீன்ஸ், பட்டாணி, முந்திரி இவற்றிலெல்லாம் மாங்கனீஸ் சத்து உண்டு.

செலீனியம் சத்து

‘செலீனியம்' சத்து பெண்களின் கரு முட்டை வளர்ச்சிக்கும், ஆண்களின் உயிரணு வளர்ச்சிக்கும் நல்லது. அதிக கொழுப்பற்ற   இறைச்சி, சம்பா அரிசி, ஓட்ஸ், முட்டை, வால்நட், முழு கோதுமை இவற்றிலெல்லாம் இந்த செலீனியம் அதிக அளவில் உள்ளது. இவை போக சுரப்பிகளின் மாறுதல்களும் தாய்மையடைதலை பெருமளவில் பாதிக்கின்றன.

உடல் பருமன்

முந்தைய வழியெல்லாம் வாழ்வோம் பகுதியில் எடை அதிகரித்தல் பற்றி விவாதித்தோம். பொதுவாக உடல் பருமன், உடல் மற்றும் மனதளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதையெல்லாம் விட, தாய்மையடைவதில் அதிக சிக்கல் உடல்   பருமனான பெண்களுக்கே உள்ளது. ஆனால் நுகர்வு கலாச்சாரம் பெருகிவிட்ட இவ்வேளையில் பெரும்பாலான பெண்கள் எடை அதிகம் இருப்பவர்களாகவே உள்ளனர். கடந்த ஆண்டு(2017) ‘University of Washington Institute for Health Metrics’  வெளியிட்ட புள்ளிவிவரம், உலகளவில் 2.1 பில்லியன் மக்கள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. 
உலக அளவில் அமெரிக்கா (86.9 மில்லியன்), சீனா (62.0 மில்லியன்) இந்த வரிசையில் 40.4 மில்லியன் என்ற எண்ணிக்கையுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா. அதாவது, 4 கோடியே 4 லட்சம் இந்தியர்கள், உடல்பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் நாற்பது சதவிகிதத்தினர் பெண்களாக இருக்கக்கூடும்.

தைராய்டு பிரச்சனை

வளரிளம் பருவத்தினர் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், தைராய்டு குறைபாடு. இது முழுக்க முழுக்க அயோடின் தாதுவின்குறைபாட்டால் வரக்கூடியது. இது ஆண்களைவிட, பெண்களை 7 மடங்குஅதிகமாகத் தாக்குகிறது என்கிறது ஒரு புள்ளி விவரம். உடல் சோர்வு, முறையற்ற மாதவிலக்கு, மலச்சிக்கல், மனஅழுத்தம் போன்றவை இதற்கானஅறிகுறிகள். எந்நேரமும் தூக்கம், கொஞ்சம் உணவு அருந்தினாலே உடல் எடைஅதிகரிப்பது, சோர்வு, டென்ஷன், எரிச்சல், படபடப்பு போன்ற அறிகுறிகள்தைராய்டு குறைபாட்டின் காரணிகளாகும். உலகம் முழுவதும் 200 மில்லியன்பேர் தைராய்டு காரணமாக தற்போது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவேஒருவருக்கு உடல் எடை அதிகரிக்கிறது என்று தெரிந்தவுடனே டெஸ்ட் எடுத்துப்பார்ப்பது அவசியம். தைராய்டு பிரச்னை இல்லை என்றால், எடைகுறைப்பதற்கான மற்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

தைராய்டு பிரச்சனைக்கான எளிய தீர்வுகள்

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர்அருந்த வேண்டும். வறுத்த, பொரித்த, இனிப்பு உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக இனிப்பை குறைத்தல் இதயத்துக்கு மிக நல்லது. தைராய்டு குறைவாக சுரப்பவர்கள் முள்ளங்கி, முட்டைகோஸ், சோயாபீன் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. கடல் மீன் வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது, அயோடின் உப்பை பீங்கான் பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைத்து பயன்படுத்துவது மிக நல்லது. அயோடின் உப்பை திறந்து வைத்தால், அந்த உப்பில் உள்ள அயோடின் காற்றில் கரைந்துவிடும். பின்னர் அதை உட்கொள்வது வீணே.  அதனால் உப்பை சரியாக மூடிவைக்கவேண்டும். முக்கியமாக,
முளைகட்டியபயறு, பழச்சாறு, பழங்கள், கீரை வகைகள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.

 

foodieதாய்மையை தாமதப்படுத்தும் மரபியல் காரணிகள்

சில மரபியல் ரீதியிலான பிரச்னைகளும் உடல் பருமனுக்குக் காரணமாகலாம். சில பெண்களுக்கு; பெண்களுக்குரிய ஹார்மோனாகியஈஸ்ட்ரோஜெனை சுரக்கவேண்டிய சினைப்பையும், பிட்யூட்டரி சுரப்பி, அதனைசரிவர சுரக்க இயலாத நிலை ஏற்படுவதால் அவர்களுக்கு மாதவிலக்கு நெருக்கடிதோன்றும். அல்லது மாத சுழற்சியில் ஒழுங்கற்ற நிலை ஏற்படும்.

பரம்பரை ரீதியாகவும் சிலருக்கு ஹார்மோன் சுரப்பு பிரச்சனைகள் ஏற்படும். அப்படிப்பட்ட பாதிப்புள்ள பெண்களின் உடலில் ஆண்களுக்கான டெஸ்ட்டோஸ்டிரான் ஹார்மோன் பெருமளவு சுரக்கும். இந்த முரண்பாடுகள் தாய்மையடைதலை பாதிக்கும்.

நீர் திசுக்கட்டிகள் (PCOD)

தாய்மையடைதலுக்கு முதல் வில்லனாக இருப்பது, `பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ் (PCOD)’. இந்திய பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு இந்த பாதிப்பு  இருக்கிறது என்று சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது. சினைப்பையில், நீர் கோர்த்த பருக்கள் தோன்றுவதையே பாலிசிஸ்டிக் ஓவேரியன் நோய்எனப்படுகிறது. நீர்கோர்த்த அந்த பருக்கள் புற்றுநோய் கட்டிகளாக மாறவாய்ப்பில்லை. இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் தாய்மை அடையலாம். 14 வயது முதல் 40 வயது வரை எப்போது வேண்டுமானாலும் இதற்கான அறிகுறிகள் தோன்றலாம்.

சினைப்பைகளின் செயல் திறனில் பிரச்னை ஏற்படுவதைத்தான்`பாசிஸ்டிக் ஓவரிஸ்’ என்கிறோம். அதாவது சினைப்பைகளை இயங்கச் செய்கிற ஹார்மோன்கள் சரியாக வேலை செய்யாததுதான் காரணம். மேலும் இந்த நீர்த்திசுக்கட்டிகள் தாய்மையடைதலை பாதிப்பதோடு இல்லாமல், டைப் 2 டயாபடிஸ், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கின்றன.  உடல் எடை அதிகரிப்பே இந்த நீர்த்திசுக்கட்டிகளின் முக்கியக்காரணியாக இருப்பதால், முறையான உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்து இந்த நோயின் வீர்யத்தை கட்டுப்படுத்தலாம்.