Skip to main content

குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுத்தா என்ன ஆகும்? -  சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

What happens if children are given siddha medicine? - Dr Arun

 

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி தொல்லை, சுவாசப் பிரச்சனை ஆகியவற்றுக்கான தீர்வுகள் குறித்து நம்மிடம் சித்த மருத்துவர் அருண் விவரிக்கிறார்.

 

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தை நாடலாமா என்கிற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் என்பது கொஞ்சம் கொஞ்சமாக வளரும். அந்த நேரத்தில் சளி, காய்ச்சல் ஆகியவை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். குழந்தை பிறந்தவுடன் உரை மருந்து என்ற ஒன்றை அந்தக் காலத்தில் நாக்கில் தடவுவார்கள். இன்றும் சித்த மருத்துவத்தில் அது வழக்கத்தில் இருக்கிறது. தாய்ப்பாலில் இந்த உரை மருந்தை உரசி குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மூன்று மாதக் குழந்தைக்கு வாரம் ஒருமுறை கூட இந்த மருந்தைக் கொடுக்கலாம். ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை உள்ள குழந்தைகளுக்கு இதன் அளவு மாறுபடும்.

 

இதன் மூலம் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தோல் பிரச்சனைகள், வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஆகியவை நீங்கும். 12 வயது வரை குழந்தைகளுக்கு உரை மருந்து கொடுக்கலாம். இப்போது இவை மாத்திரைகளாகவும் வருகின்றன. சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி சளி ஏற்படுபவர்களுக்கு ஓமவல்லி இலையின் சாரை சூடான கரண்டியில் ஊற்றி நாம் கொடுக்கலாம். இதன் மூலம் முதல் கட்டத்திலேயே சளி நின்றுவிடும். சளி என்பது இருமலாக மாறிவிட்டால் அருகிலிருக்கும் சித்த மருத்துவரை அணுக வேண்டும்.

 

ஆடாதோடை மணப்பாகு என்பது ஆடாதோடை இலையின் மூலம் செய்யப்படும் ஒரு மருந்து. சளி, சுவாசப் பிரச்சனைகள் ஆகியவற்றுக்கு இது சிறந்த ஒரு மருந்தாக இருக்கும். 3 முதல் 6 வயது குழந்தைகளுக்கு 5 மில்லி அளவுக்கு, சுடுநீரில், உணவுக்குப் பிறகு தினமும் மூன்று வேளை இந்த மருந்தைக் கொடுக்கலாம். 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு 10 மில்லி அளவில் கொடுக்கலாம். ஆடாதோடை மணப்பாகு அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டிய மருந்துகளில் இதுவும் ஒன்று. இதைச் செடியாகவும் வீட்டில் வளர்க்கலாம். சளி வந்ததால் குழந்தைக்கு எடை குறைகிறது என்கிற எண்ணம் பலருக்கு இருக்கும். இந்த மருந்துகளின் மூலம் அதைத் தடுக்கலாம். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை இந்த மருந்துகள் அதிகரிக்கும். மூளையின் செயல் திறனும் இதன் மூலம் அதிகரிக்கும்.