பற்கள் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும் பிரச்சனை குறித்து விவரிக்கிறார் பல் மருத்துவர் டாக்டர். அருண் கனிஷ்கர்
பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் தங்களுடைய அழகு குறைகிறது என்று பலர் நினைக்கின்றனர். எனாமல் எனப்படும் பகுதி வெள்ளையாக இருக்கும் கண்ணாடி போன்ற ஒரு பொருள் என்று வைத்துக்கொள்ளலாம். டென்டின் என்பது மஞ்சளாக இருக்கும் ஒரு பொருள். டென்டின் தான் எனாமல் பகுதியைப் பாதுகாக்கும். டென்டினின் நிறத்தை எனாமல் வெளிக்காட்டும். இதனால் தான் சிலருக்கு பற்கள் மஞ்சளாக இருக்கிறது. சிலருக்கு மஞ்சளாகவும் சிலருக்கு வெள்ளையாகவும் ஏன் இருக்கிறது என்கிற கேள்வி உங்களுக்கு வரலாம்.
மனிதர்களாகிய நமக்கு நம்முடைய வாழ்வில் இரண்டு பல்வகைகள் இருக்கும். யானைகளுக்கு ஆறு பல்வகைகள் இருக்கும். இது ஒவ்வொரு உயிரினங்களுக்கும் வேறுபடும். டென்டினின் அடர்த்தி அதிகம் ஆக ஆக பற்கள் மஞ்சள் நிறமாவதும் அதிகமாகிக்கொண்டே இருக்கும். இதுவும் அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது. அதிலும் பல்வேறு வகைகள் இருக்கின்றன. இதில் பற்களில் மஞ்சள் நிறத்தோடு மற்ற நிறங்களும் கலந்திருக்கும். இதற்காக தனியாக ஆராய்ச்சியே நடத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் மனிதர்களுக்கு ஒவ்வொரு பகுதியில் உள்ள பற்களும் ஒவ்வொரு ஷேடில் இருக்கும்.
பற்கள் மஞ்சளாக இருப்பது என்பது பலருக்கும் நிகழக்கூடிய ஒன்றுதான். ஆனாலும் நீங்கள் மீடியாவில் இருப்பவராக இருந்தாலோ, அல்லது உங்களது பற்கள் கவனிக்கப்படும் இடத்தில் இருப்பவராக இருந்தாலோ, நீங்கள் உங்களுடைய பற்களை நிச்சயம் வெள்ளையாக மாற்றலாம். இதற்காக டூத் ப்ளீச்சிங்க் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முறைகள் இருக்கின்றன. சிலருக்கு ஒரே ஒரு பல் மட்டும் அதிக மஞ்சளாக இருக்கும். கீழே விழுந்து பற்களில் காயம் ஏற்பட்டது அதற்கான காரணமாக இருக்கலாம். இப்படி பற்களுக்கு ஷாக் ஏற்படும்போது அவை விரைவில் மஞ்சள் நிறத்துக்கு மாறும்.
இதில் பற்கள் மஞ்சள் நிறத்துக்கு மட்டுமல்லாமல் கருப்பு நிறத்துக்கு மாறவும் வாய்ப்பிருக்கிறது. பற்கள் கருப்பு நிறத்துக்கு மாறினால் அதை நாம் ரூட் கெனால் முறை மூலம் தான் சரிசெய்ய முடியும். பற்களின் வேர் முழுமையாக உருவாவதற்கு முன் இது நடந்தால் அதற்கென தனி சிகிச்சைகளும், வேர் உருவானதற்குப் பின் இது நடந்தால் அதற்கென தனி சிகிச்சைகளும் இருக்கின்றன.