தொப்பை வருவதற்கான காரணம் குறித்தும் இயற்கை உபாதை சிக்கல் குறித்தும் சித்த மருத்துவர் அருண் தெரிவித்ததாவது;
நிறைய பேருக்கு தொப்பை இருக்கிறது. இதனால், வயிற்றில் வெறும் கொழுப்பு தான் இருக்கும் என்றில்லை. மாறாக நாம் சாப்பிடும் உணவுகளால் கேஸ் கூட உண்டாகியிருக்கும். மேலும், மது அருந்துவது, பிட்சா, குளிர்பானங்கள் போன்றவற்றாலும் உடல் உழைப்பு குறைந்ததும் தொப்பை வருவதற்கு காரணமாகலாம்.
சமையலில் விளக்கெண்ணெய்யைப் பயன்படுத்துவதன் மூலம் மலச் சிக்கலை குறைக்க உதவும். குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சினை வருவதுண்டு. துவரம் பருப்பை வேகவைக்க, தோசை சுடவும் விளக்கு எண்ணெய்யை பயன்படுத்துவதால் இயற்கையாக மலம் கழிய வாய்ப்புள்ளது. மலச் சிக்கல் பலசிக்கல் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்போம்.
இயற்கை உபாதையை கழிப்பதை அருவருப்பாக கருத வேண்டாம். தினமும் எப்படி சாப்பிட்டு, தண்ணீர் குடித்து, உறங்குகிறோமோ அதுபோல இயற்கை உபாதையையும் தினமும் கழிக்க வேண்டும். இதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் உடலில் நோய் இருக்கிறது என்று அர்த்தம். தினமும் ஒரு முறையாவது இயற்கை உபாதையை கழிக்க வேண்டும். அப்படி நடந்தால் தான் உடலில் உள்ள கழிவுகள் நீங்கி விட்டதற்கான அறிகுறி.
இதில் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க நார்ச் சத்துள்ள கீரை வகைகள், காய்கறிகள், கொய்யாப் பழம், மாதுளை, சப்போட்டா, திராட்சை, உலர் திராட்சை உள்ளிட்டவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன்பிறகும் சரியாகவில்லை என்றால் உங்கள் குடும்ப சித்த மருத்துவரை அணுகலாம். மாறாக, நீங்களே முடிவெடுத்து வைத்தியம் பார்க்காதீர்கள்.
சிலருக்கு உடல் சூட்டினால் இயற்கை உபாதை கழிப்பதில் பிரச்சனை ஏற்படும். அப்போது அவர்கள் விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம்.