கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து நம்மிடம் மருத்துவரும் பேராசிரியருமான ஸ்ரீகலா பிரசாத் பகிர்ந்து கொள்கிறார்.
தடுப்பூசி மூலம் அம்மை போன்ற நோய்களை நாம் ஒழித்திருக்கிறோம். பல புற்றுநோய்களுக்குத் தீர்வு என்ன என்பது நமக்குத் தெரியாது. ஆனால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தீர்வு தடுப்பூசி வாயிலாக நம்மிடம் இருக்கிறது. குறைந்த வயதிலேயே திருமணம் செய்வதை நிறுத்த வேண்டும். ஒருவனுக்கு ஒருத்தி என்கிற ஒழுக்க முறையைப் பின்பற்றுவதும் இதுபோன்ற நோய்கள் நம்மை அண்டாமல் இருக்க உதவும். இந்தத் தடுப்பூசியை குழந்தைப் பருவத்தில் செலுத்த வேண்டும். 9 முதல் 14 வயது தான் இந்தத் தடுப்பூசியை செலுத்துவதற்கு சரியான காலம். அப்போது குழந்தைகளின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.
ஏற்கனவே இந்த நோய்க்கான வைரஸ் தாக்காமல் இருப்பவர்களே தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். முதலில் ஒரு டோஸ் போட்ட பிறகு ஆறு மாதம் கழித்து அடுத்த டோஸ் போட வேண்டும். 9 முதல் 14 வயதுக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தவறினால் 26 வயதுக்குள் செலுத்திக் கொள்ளலாம். மொத்தம் மூன்று டோஸ் தடுப்பூசி போட வேண்டும். 26 வயதுக்கு மேலும் தடுப்பூசி செலுத்தலாம். ஆனால் ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்படாதவராக இருக்க வேண்டும். எனவே தடுப்பூசி செலுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
பல காரணங்களினால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாம் மறந்து விடுகிறோம். தடுப்பூசியின் விலையும் அதிகமாக இருக்கிறது. 90 சதவீத குழந்தைகளுக்காவது இந்தத் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் விரும்புகிறது. ஒரு பெண் வயதுக்கு வரும்போது இந்த தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று ஞாபகம் வைத்துக்கொள்ளலாம். மற்ற பழக்கவழக்கங்களைப் போல தடுப்பூசி செலுத்துவதையும் ஒரு பழக்கமாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.