கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கான வழிகள் குறித்து டாக்டர் அருணாச்சலம் விளக்குகிறார்.
நம் ஊரில் திடீரென தட்பவெட்ப நிலை மாறுவது மிகவும் குறைவு தான். நம் உடல் எவ்வளவு வெப்பத்தை வேண்டுமானாலும் தாங்கக்கூடிய சக்தி படைத்தது. 98.6 டிகிரி வரை உடல் சூடு இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அந்த சூடு எப்போதும் இருக்க வேண்டும். அதிக குளிர்ச்சியைத் தான் நம் உடல் தாங்காது. இந்தக் கால கட்டத்தின் போது பெண் குழந்தைகள் ஸ்லீவ்லெஸ் அணியக்கூடாது. பெற்றோரும் அதற்கு உதாரணமாக இருக்க வேண்டும். உடல் முழுமைக்குமான உடைகளை அணிவது நல்லது. அதனால் கொசுக்கடியில் இருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும். வெயில் போன்ற பிரச்சனைகளிலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்பதைப் பொறுத்து தான் உடல் சூடு ஏற்படுகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணிக்குள் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை ஏற்பட்டால் அதற்குக் காரணம் சூடு அல்ல. சரியான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான் காரணம். கிராமங்களில் புளியைக் கரைத்து, சொம்பில் ஊற்றி, கருப்பட்டியைக் கலந்து ஒரு பானம் தயாரித்துக் கொடுப்பார்கள். உடனடியாக சூட்டைத் தணிக்கும் திறன் அதற்கு உள்ளது. நாம் காய்கறிகளை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எதை எப்போது சாப்பிட வேண்டுமோ, அதை அப்போது சாப்பிட வேண்டும். வேண்டாத நேரத்தில் வேண்டாதவற்றை சாப்பிடுவதையே பலர் பின்பற்றுகின்றனர். மனிதர்களைப் புரிந்துகொள்வது கடினமானது. அவர்கள் உடல் நலத்தைப் பேண கவனம் செலுத்த வேண்டும்.