Skip to main content

"ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறிகள்..." - மருத்துவர் அருணாச்சலம் விளக்கம்

Published on 28/10/2022 | Edited on 28/10/2022
"Symptoms of a heart attack...."- Dr. Arunachalam explained!

 

'நக்கீரன் 360' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இன்சுலின் குறைவாக சுரப்பதனால் வருவது சர்க்கரை வியாதி. இருதயம் மூன்று விதமான வேலைகளைச் செய்கிறது. ஒன்று நன்றாக விரிந்து சுருங்கி ரத்தத்தை உடல் முழுவதும் பம்ப் செய்கிற மோட்டார் வேலை. அந்த உறுப்பில் மூன்று ரத்தக் குழாய்கள் இருக்கிறது. அந்த மூன்று ரத்தக் குழாய்களிலும் பெரிய ரத்தக் குழாய் எல்லா செல்களுக்கும் இருதயத்துடைய ரத்தப் பரிமாற்றம் நடத்துவதற்கு. அதில் ரத்தம் சென்றால் இருதய செல்களோ இருதயத்துடைய சுவர்  மற்றும் தசைகளோ வேலை செய்யும். அந்த ரத்தக் குழாய்களில் ஏற்படுகின்ற அடைப்பே ஹார்ட் அட்டாக் என்கிறோம். 

 

மூன்றாவது இருதயத்தில் ஒரு வேலை இருக்கிறது. அது என்னவென்றால், இருதயம் துடிப்பது ஆகும். தானாகவே எலெக்ட்ரிசிட்டி உருவாகி அது ஓர் வேவ் மாதிரி வந்து அந்த இருதயத்தைச் சுருங்க வைக்கவும் விரிய வைக்கவும் உதவுகிறது. அதைத் தான் நாம் இசிஜி மூலமாகப் பதிவு செய்கின்றோம். மூன்றில் எதில் குறைபாடு இருந்தாலும் ஹார்ட் அட்டாக் வரலாம். இதைத் தாண்டி சிறு வயதில் இருந்தே ஏதாவது நோய் இருந்து அது வெளிப்படாமல் இருந்திருக்கலாம். 

 

அளவுக்கு அதிகமாக வேலைகளைச் செய்யும் நபர்கள், அளவுக்கு அதிகமாக கண் விழித்திருக்கும் நபர்கள் ஆகியோர் தாங்கள் ஃபிட் ஆக இருக்கிறோமா என்பதை தெரிந்து கொண்டு 'ஒர்க் அவுட்' செய்யப் போனால் நல்லது. எல்லாவற்றையும் பரிசோதனைகள் மூலம் நாம் கண்டுபிடித்துவிட முடியாது. ஆனால், சிறிய அறிகுறிகள் கூட நம் உடலில் ஏற்பட்டால் விஞ்ஞானத்தின் மூலமாக எதாவது காரணம் இருக்கா? என்று கண்டுபிடித்து வேலையைச் செய்ய வேண்டும். உடற்பயிற்சி  செய்யும் போது மூச்சு வாங்குவது, உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சு வலி ஏற்படுவது, நடக்கும் போது மூச்சு திணறல் ஏற்படுவது ஆகியவற்றை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. 

 

ஒருவர்  திடீரென்று உடற்பயிற்சி செய்யும்போதோ, மன உளைச்சலுக்கு ஆளாகும்போதோ இந்த மாதிரியான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்குக் காரணம் ஆகிறது. மேலும், உடற்பயிற்சியின்மையும் உணவும் ஒரு காரணம். வழக்கமான வேலைகளைத் திடீரென பார்க்கும் போது மூச்சுத் திணறல் மற்றும் மூச்சு வாங்குவது, நெஞ்சுவலி உள்ளிட்டவை  ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறிகள் ஆகும். ஹார்ட் அட்டாக் வந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்." இவ்வாறு மருத்துவர் தெரிவித்துள்ளார்.