சிறுநீரக கற்கள் ஏற்படாமல் இருக்க எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும், என்னென்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக்கூடாது என்பது குறித்து டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் விளக்குகிறார்
தண்ணீரே குடிக்காமல் இருப்பது போல, அதிகமாக தண்ணீர் குடிப்பதும் சிறுநீரகத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். தினமும் இரண்டரை லிட்டர் வரை தண்ணீர் குடித்தால் போதும். சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட்டால் அதை குணப்படுத்த மாத்திரைகள் இருக்கின்றன. பெரிய கற்கள் இருந்தால், சிறிய துளை போட்டு அறுவை சிகிச்சை மூலம் அவற்றை நீக்கலாம். கற்களின் தன்மையை முழுமையாக ஆராய்ந்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிலர் சிறுநீரக கற்களை கண்டுகொள்ளாமல் விடுகின்றனர்.
அப்படி விடுவதால் கற்களின் அளவு பெரிதாகிறது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்துவிடுவார்கள் என்று பயப்பட வேண்டாம். உங்களுடைய சிறுநீரக கல்லின் தன்மையைப் பொறுத்து தான் அதற்கான சிகிச்சையும் முடிவு செய்யப்படும். சிறுநீரகத்தில் கற்கள் இருந்து, வலி ஏற்படாமல் இருந்தால் உங்களுடைய சிறுநீரகம் வேலை செய்யவில்லை என்று அர்த்தம். எனவே வலி ஏற்படவில்லை என்பதற்காக கவனமில்லாமல் இருந்து விடாதீர்கள். எப்போதுமே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சரியான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் அதிகம் உப்பு சேர்ப்பதால் சிறுநீரக கற்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தயிர் சாதத்தில் உப்பு சேர்க்காதீர்கள். ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட வேண்டும். பாட்டிலில் வரும் குளிர்பானங்களைத் தவிருங்கள். மோர், இளநீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது. பாலில் உள்ள கால்சியம் சத்து உடலுக்கு மிகவும் தேவையானது. எனவே நாம் நிச்சயம் பால் சாப்பிட வேண்டும். பாலை முற்றிலுமாக நிறுத்தினால் சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இன்னும் அதிகரிக்கும். எப்போதும் Balanced Diet எடுத்துக்கொள்வதே சரியானது.