ஆங்கில மருத்துவமே நம்மில் பலராலும் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும், சித்த மருத்துவத்தின் மீதான காதல் நமக்கு இல்லாமல் இல்லை. ஆனால் சித்த மருத்துவம் குறித்த புரிதல் இங்கு குறைவாகவே இருக்கிறது. சித்த மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து சித்த மருத்துவர் டாக்டர். அருண் விரிவாக விளக்குகிறார்.
பொதுவாகவே சித்த மருத்துவம் என்றால் தாமதமான மருத்துவ முறை என்கிற புரிதல் பலருக்கு இருக்கிறது. ஆனால் அதில் உண்மையில்லை. நோயைப் பொறுத்தே கால அளவும் நிர்ணயிக்கப்படுகிறது. சளி, இருமல், காய்ச்சல், அரிப்பு, வயிற்று வலி போன்ற நோய்களுக்கு அதிக நாட்கள் மருந்து சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அவற்றை விரைவாக குணப்படுத்த முடியும். மூட்டு வலி போன்ற நோய்களையும் ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அணுகினால் விரைவாக குணப்படுத்த முடியும். நோய் ஏற்பட்டு பத்து வருடம் கழித்து மருத்துவரிடம் வந்தால் மேஜிக் போன்று உடனடியாக குணப்படுத்த முடியாது. நோய்க்கான காரணத்தை நாங்கள் முதலில் ஆராய்வோம். நவீன மருத்துவத்தில் வலி போன்ற அறிகுறிகளை குணப்படுத்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். அது குறுகிய காலத்திற்கே பயன்படும். சித்த மருத்துவத்தில் நோய்க்கான வேரைக் கண்டறிந்து அந்தக் காரணத்தைச் சரி செய்வதற்கான மருத்துவத்தை வழங்குகிறோம். அதனால்தான் சிறிது தாமதம் ஏற்படுகிறது.
மூட்டு வலி, தோல் நோய்கள், ஆஸ்துமா போன்ற சில நோய்களுக்குத் தான் குணமாக நீண்ட காலம் பிடிக்கும் வாய்ப்புண்டு. மற்ற நோய்கள் விரைவில் குணப்படுத்தப்படும். ஒவ்வொருவருடைய உடல் நிலையும் மாறுபடும். அதற்கேற்ற வகையில் கால அளவும் மாறுபடும். அந்தக் காலத்தில் போர் காயங்களுக்கே சித்த மருத்துவத்தில் தான் மருந்துகள் வழங்கப்பட்டன. இதற்கான ஆதாரங்களை நீங்கள் சங்க இலக்கியங்களில் பார்க்க முடியும். உணவுக் கட்டுப்பாட்டையே சித்த மருத்துவத்தில் பத்தியம் என்று அழைக்கிறோம். இது அனைத்து வகையான மருத்துவத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது. நோய்க்கான காரணங்களை நாம் தேடுவதால், நோயை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்க்கச் சொல்கிறோம். நோய்க்குத் தகுந்த பொதுவான உணவுக் கட்டுப்பாட்டையே நாம் பரிந்துரைக்கிறோம். உடல் சூடு அதிகமாக இருந்தால்தான் காபி, டீயை குறைக்கச் சொல்கிறோம். இவை அனைத்துமே நோயிலிருந்து நீங்கள் விரைவாக விடுபடுவதற்குத் தான்.
சித்த மருத்துவத்தில் 32 வகையான உள் மருந்துகளும் 32 வகையான வெளி மருத்துவமும் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் வெளி மருத்துவமான வேவு பிடித்தல் கொரோனா காலத்தில் பலராலும் பின்பற்றப்பட்டது. உடலின் வெப்பத்தை அதிகரிப்பதற்காகத் தான் வேவு பிடிக்கிறோம். நொச்சி இலை தான் இதற்கான சரியான மூலிகை. சளி, தலை பாரம், தும்மல் ஆகியவற்றை குணப்படுத்த நீரில் நொச்சி இலை, மஞ்சள் தூள் போட்டு வேவு பிடிக்கலாம். நொச்சி இலை கிடைக்கவில்லை என்றால் வேப்பிலை, மஞ்சள் தூள் மூலம் இதைச் செய்யலாம். அதுவும் இல்லையென்றால் மஞ்சள் தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்தும் செய்யலாம். மாதத்தில் ஒரு முறை வேவு பிடிப்பது நல்லது. ஏசியில் அதிகம் இருப்பவர்களுக்கு இது நோய்கள் வராமல் காத்துக்கொள்ள உதவும். மாத்திரைகள், தைலங்கள் போன்றவற்றை இதற்குப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.