நன்றாக தூங்குவதற்கு சித்த மருத்துவர் நித்யா சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறார்.
தூக்கமின்மையால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்று முந்தைய பகுதியில் பார்த்தோம். எனவே இதை சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறவர்கள் ஒரு வாரம் சித்த மருத்துவ குறிப்பின்படி சொல்கிற சில டிப்ஸ்களை பின்பற்றினாலே உடனடியாக சரி செய்ய முடியும்.
காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பதை கண்டிப்பாக நிறுத்த வேண்டும். இரவு முழுவதும் வயிறு நீரற்று உஷ்ணமாக இருப்பதால் முதற்கட்டமாக நீர் அருந்த வேண்டும். இரவே வெந்தயம் ஊறப்போட்டு அதை பருகலாம். அல்லது சீரகம் ஊற போட்டு குடிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் நன்னாரி, தேர்த்தாங்க் கொட்டை, வெட்டி வேர் போன்றவற்றை வாங்கி தேவையான அளவு எடுத்துக் கொண்டு இரவே ஊறவைத்து காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும்.
இது குடிப்பதால் உடல் உஷ்ணம் நீங்கி ஆழ்ந்த தூக்கத்திற்கு உங்களை உடல் தயார்ப்படுத்திக் கொள்ளும். கசகசாவை பாலில் கலந்து குடிக்கலாம். சித்த மருத்துவத்தில் அதிமதுரம் சூரணம் வாங்கி இளம் சூடான பாலில் கலந்து குடிக்கலாம். அதிமதுரம் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் சரிசெய்து தூக்கம் அதிகரிக்கும். இரவு நேர உணவை சீக்கிரம் முடித்துவிட்டு தூங்க வேண்டும். போனை அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது. ஜீரணம் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவை கண்டிப்பாக நிறுத்தி விட வேண்டும். இதையெல்லாம் பின்பற்றினால் இரவு நேர உறக்கத்தினை பெறலாம்.