உணவில் நெய் எடுத்துக் கொள்வதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் என்றும் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்று பிரபல சித்த மருத்துவர் நித்யா விளக்குகிறார்.
உணவில் நெய் எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்கும், கொழுப்பின் அளவு அதிகரிக்கும் என்று பொதுவாக நினைக்கிறார்கள். சித்த மருத்துவத்தில் 64 வகை மருந்துகள் இருக்கிறது. இதில் உள் மருந்துகள் 32 வகைப்படும். வெளி மந்துகள் 32 வகைப்படும். இதில் உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளும் மருந்தில் நெய் முக்கியமாக பார்க்கப்படுகிறது. நெய்யை சித்த மருத்துவத்தில் ‘திரவத் தங்கம்’ என்கிறோம்.
காலையில் வெறும் வயிற்றில் நெய் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். அதை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம். கழுத்து வலி, முதுகுவலி, எலும்பு தேய்மானம், எலும்பில் வலு தன்மை குறைந்து எளிதில் உடையக்கூடியதாய் இருப்பவர்கள் நெய் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். நெய்யை உருக்கி 10 மில்லி அளவில் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடை அதிகரிக்கும் என்று பயப்படுபவர்கள் சுடுதண்ணியில் கலந்து குடிக்கலாம்; இதனால் எடை அதிகரிப்பு நடக்காது.
வயிற்றுப்புண், கல்லீரலில் கொழுப்பு சேர்ந்திருப்பவர்களுக்கு சித்த மருத்துவத்தில் அதிமதுர சூரணம் தருவோம். இதனை நெய்யில் தான் கலந்து சாப்பிட வேண்டும். சித்த மருத்துவ இலைச் சாறுகளையும் நெய்யில் கலந்து தான் சாப்பிட வேண்டும். வெள்ளை கரிசலாங்கண்ணி சாற்றை நெய்யுடன் இணைத்து காய்ச்சி தினமும் எடுத்து வரும் பட்சத்தில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனை சரியாகும், பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
தூதுவளை சாற்றினை நெய்யுடன் இணைந்து சாப்பிடும் பொழுது பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனை சரியாகும். சதாவரி கிழங்கினை நெய்யோடு சேர்ந்து சாப்பிட்டு வருவதால் பெண்களுக்கு தைராய்டு, மாதவிடாய் பிரச்சனை சரி செய்யும். மணத்தக்காளியை அரைத்து நெய்யுடன் சாப்பிட்டு வருவதால் வயிற்றுப்புண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் சரி செய்து கொள்ளலாம். தினமும் வெறும் வயிற்றில் இவற்றை 10 மில்லி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். உணவில் அளவோடு எடுத்துக் கொள்வதால் கொலஸ்ட்ரால் அளவு கண்டிப்பாக அதிகரிக்காது.