பல்வேறு நோய்களை வீட்டிலிருந்தே சரிசெய்யும் முறை பற்றி சித்த மருத்துவர் அருண் விளக்குகிறார்
உணவே மருந்து, மருந்தே உணவு என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உணவே மருந்து என்பது கூட நமக்குப் புரியும். மருந்தே உணவு என்றால் என்ன என்கிற கேள்வி அனைவருக்கும் வரும். ஒருகாலத்தில் அனைவரின் வீட்டிலும் அஞ்சறைப்பெட்டி இருந்தது. அதில் மஞ்சள், மிளகு, வெந்தயம், சீரகம், பூண்டு, பெருங்காயம், சுக்கு, ஏலக்காய் ஆகியவை இருக்கும். இவை அனைத்தும் உணவாகவும் பயன்படும், மருந்தாகவும் பயன்படும். சிறிய நோய்கள் முதல் பெரிய நோய்கள் வரை இவற்றால் குணப்படுத்த முடியும். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உணவருந்தலாம் என்பது பழமொழி.
மிளகு என்பது நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கக் கூடியது. கிருமிகளுக்கு எதிராக போராடக் கூடியது. மருந்துகளோடு மிளகு சேர்த்துக் கொடுக்கும்போது அதன் வீரியம் அதிகரிக்கும் என்பது ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். பூண்டு கொழுப்பைத் தடுக்கக் கூடியது. இதன் மூலம் மாரடைப்பு தடுக்கப்படும். சீரகம் செரிமானத்துக்கு உதவும், பித்தத்தைக் குறைக்கும்.
இவை அனைத்தையுமே நாம் உணவாகவும் பயன்படுத்துகிறோம், மருந்தாகவும் பயன்படுத்துகிறோம். வாதம், பித்தம், கபம் ஆகியவை இயல்பு நிலையிலிருந்து மாறும்போது தான் நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை எப்போதும் இயல்பு நிலையில் வைத்திருக்க வேண்டும். இதை உணவின் மூலம் நம்மால் செய்ய முடியும். அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் பொருட்களை அன்றாடம் சமையலில் நாம் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக ரசம் வைக்கும்போது இதில் உள்ள பெரும்பாலான பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம். எனவே ரசம் உண்ணுவதே அவற்றை இயல்பில் வைப்பதற்கான முக்கியமான ஒரு வழி.
நம்முடைய உடலைப் பாதுகாப்பதற்கான அடிப்படையான ஒரு விஷயம் இது. ஒவ்வொன்றையும் தேவையான அளவுக்கு நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தலைவலியை நீக்க சுக்கு பயன்படும். இனிப்பினால் வரும் மந்தத்தைப் போக்க ஏலக்காய் நமக்குப் பயன்படுகிறது. மஞ்சள் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. அனைத்து குழம்புகளிலும் மஞ்சள் பொடியை நாம் சேர்க்கிறோம். குடல் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி கூட மஞ்சளுக்கு இருக்கிறது. மஞ்சள் பயன்பாட்டினால் தான் இந்தியாவில் குடல் புற்றுநோய் குறைவாக இருக்கிறது.