இளம் வயதில் நமக்கு அதிக கவலையைத் தருபவை முகப்பருக்கள். அந்த முகப்பருக்களில் இருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து சித்த மருத்துவர் அருண் விளக்குகிறார்.
முகப்பரு என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை தான். குறிப்பாக இளைஞர்களுக்கு இது பெரும் பிரச்சனையாகவும், மனத்தடையாகவும் இருக்கிறது. எண்ணெய் பசை உள்ள தோலாக இருந்தால் முகப்பரு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சத்து குறைபாடு இருந்தாலும், உடல் சூடாக இருந்தாலும் முகப்பரு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு குறையும். மலச்சிக்கல் இருப்பவர்களுக்கும் முகப்பரு ஏற்படும்.
சத்து குறைபாடு இருப்பவர்கள் கீரைகள், காய்கறிகள், மாதுளை, நெல்லிக்காய் ஆகியவற்றை சரியான முறையில் உண்ண வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளாலும் முகப்பரு ஏற்படலாம். கற்றாழையில் உள்ள மடலை நன்கு அலசி வெறும் வயிற்றில் சாப்பிடலாம். பூண்டு, கருப்பட்டி ஆகியவற்றையும் அதனோடு சேர்த்துக் கொள்ளலாம். இவற்றை மாதவிலக்கு காலத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே சாப்பிட்டு வர வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. பருக்கள் ஏற்படுவது நம்முடைய எண்ணங்களினாலும் இருக்கலாம், உடல் குறைபாடுகளினாலும் இருக்கலாம்.
தலையில் பொடுகு பிரச்சனை இருப்பவர்களுக்கும் முகப்பரு ஏற்படலாம். புளித்த தயிர், முட்டைக் கரு ஆகியவற்றைத் தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு பிரச்சனை தீரும். முகப்பரு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். அதை வெளியேற்ற வேண்டும் என்று கை வைத்து அமுக்குவது போன்ற தவறான நடைமுறைகளை கடைபிடிக்கக் கூடாது. முகப்பருவைத் தொடாமல் இருக்க வேண்டும். வெளியில் சென்று வந்த பிறகு சுத்தமான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். காலையிலும் இரவிலும் சோப் போட்டு முகத்தைக் கழுவலாம்.
ஆவாரம்பூ இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து, பாலில் கரைத்து, முகத்தில் தடவி வந்தாலே முகப்பரு ஏற்படாது. கருவளையங்கள் சத்து குறைவினாலும், வயிற்றுக் கோளாறுகளினாலும், தூக்கமின்மையாலும் ஏற்படுகின்றன. தேவையான அளவு தண்ணீர் குடிப்பது, சத்தான உணவுகளை உண்பது போன்றவற்றை மேற்கொண்டாலே இந்தப் பிரச்சனைகள் எதுவும் வராது.