விலை அதிகமான காய்கறிகளை கஷ்டப்பட்டு வாங்குகிறோம், அதில் தான் ஆரோக்கியம் இருப்பதாக நம்புகிறோம் இது குறித்து சித்த மருத்துவர் அருண் விளக்குகிறார்.
நாம் வசிக்கும் இடங்களில் கிடைக்கும் காய்கறிகளை விட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் காய்கறியைத்தான் பொதுவாகவே நம் மக்கள் விரும்புகின்றனர். வீட்டுத் தோட்டத்தில் விளையும் அவரைக்காய், முருங்கைக்காய், பசலைக் கீரை உண்பதில் சத்து இல்லை என நினைக்கின்றனர். மாறாக, சூப்பர் மார்க்கெட் சென்று கலர் கலர் முட்டைகோஸ், ப்ரோக்கோலி போன்ற காய்கறிகளில் தான் சத்துகள் இருப்பதாக எண்ணுகிறார்கள். நம் மண்ணில் விளையும் தானியங்களை, காய்கறிகள் நமக்கேற்ற தாதுக்களை வழங்குகிறது. இவை விலை குறைவாக கிடைக்கிறது. எனவே, பணக்காரர்கள் உண்ணும் விலையுயர்ந்த காய்கறிகளை உண்பதற்கு ஆசைப்படுகிறார்கள்.
முன்னொரு காலத்தில் நாம் கேழ்வரகு, கம்பு, சோளம் என சாப்பிடும் போது, பணக்காரர்கள் அரிசி சாப்பிடுவதை பார்த்து அந்த பழக்கத்திற்கு மாறினோம். அப்பொழுது, உயர்ந்த வகுப்பினர் மட்டுமே உண்ணும் பொருளாக அரிசி இருந்தது. ஆனால், சுழற்சி முறையில் தற்போது, பணக்காரர்கள் சிறுதானிய உணவிற்கு மாறிவிட்டு. அரிசி உடலுக்கு ஏற்றதில்லை என்ற பிரச்சாரமும் பரவிவருகிறது. மேலும், பழைய சாதம் தான் சத்தானது என்று சிலர் பேட்டியும் கொடுக்கின்றனர். இதனால், நாமும் ஹோட்டலுக்குச் சென்று பழைய சாதத்தை 200 ரூபாய் வரை கொடுத்து வாங்கி சாப்பிடுகிறோம். பணக்காரர்கள் பின்பற்றி வரும் உணவு பழக்கம் தான் பிறர் அந்த நிலைக்கு சென்றவுடன் தாங்களும் உணவு, உடை போன்றவற்றில் மாற்றம் அடைகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, இன்று பலரும் உண்ணும் பீட்சா கூட இப்படி வந்தது தான். இதற்கு காரணம், உயர்வானவர்கள் எதனை பின்தொடர்கிறார்களோ அது உயர்ந்தது என்று எண்ணிக் கொள்வதுதான்.
இதனால், நம் அன்றாடம் சாப்பிட்டு வந்த நாட்டுக் கத்திரிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், சுண்டைக்காய் முதல் வீட்டு தோட்டத்தில் விளையும் கீரை வகைகள் புறந்தள்ளப்பட்டு. வெளிநாட்டு படையெடுப்புகளுக்கு பிறகு, மிளகாய், தக்காளி முதலியன பயன்படுத்த தொடங்கினோம். மேலும், வெளிநாட்டவர்கள் வெண்மையின் காரணம் அவர்களின் உணவு என்று அதனை பின்பற்றுவது நமது அறியாமை என்று சொல்லலாம்.
பொதுவாக சித்த மருத்துவர்கள் புதிதாக ஒரு ஊருக்கு சென்றால் அங்குள்ள மூலிகைகள் குறித்து ஆராய்வோம். ஏனென்றால், அந்த மூலிகைகளை வைத்து தான், எந்த மாதிரி நோய் அருகில் பரவும் என கண்டறிவோம். எனவே, நீங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்தாலும் சுற்றி 50கி.மீ. விவசாய நிலங்களில் கிடைப்பதை வாங்கலாம். இதைவிடுத்து, இந்த விலையுயர்ந்த காய்களை சாப்பிட்டால் புற்று நோய் வராது எனும் வாட்ஸ் அப் செய்திகளை நம்பாதீர்கள். முன்பு கூறியது போல, உயர்தட்டு மக்கள் தங்களது உணவு பழக்கத்தை சிறுதானியத்தை நோக்கி மாற்றியுள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நூடில்ஸ் கூட இன்றைக்கு கெடுதல் என சொல்கிறார்கள். எனவே, ஏழைகளின் உணவை(தானியங்கள்) அவர்கள் உண்கின்றனர், அவர்களின் உணவு முறைக்கு நாம் மாறிவிட்டோம்.
இதனால், நம்மை சுற்றி தோட்டத்தில் விளையும் காய்கறிகள், கீரை வகைகள், நெல்லிக் கனி, மாதுளை முதலானவைகளை சாப்பிட வேண்டும். ஏனென்றால், இவைதான் எளிதில் செரிக்கக் கூடியது. இதைவிட்டு, முட்டகோஸ், ப்ரக்கலி போன்ற உணவுகள் நமக்கு மருத்துவ காலத்தில் உதவாது. நமக்கு அருகில் விளையும் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் அளித்து அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வாருங்கள். இதுவே, நோய் வராமல் நம்மை தற்காத்துக் கொள்ளும் நல்ல மருந்தாக பயன்படும். உணவே மருந்து, மருந்தே உணவு!