தனக்குத் தானே மருத்துவம் செய்துகொள்வதன் ஆபத்து குறித்து ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்குகிறார்
ஒரு பெரியவர் என்னிடம் வந்தார். தனக்கு காலில் அடிபட்டிருக்கிறது என்று கூறினார். அவருடைய காலில் ரத்தம் வந்தது. அதற்கு கட்டு போட்டு, ஊசி போட்டு, மாத்திரை கொடுக்க வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. நான் ஒரு மருத்துவராக அவருக்கு பிரஷர் இருக்கிறதா, நாடி எப்படி இருக்கிறது உள்ளிட்ட அனைத்தையும் பரிசோதனை செய்தேன். அதில் அவருக்கு கொஞ்சம் கூட சம்மதமில்லை. எப்போது அங்கிருந்து வெளியேறலாம் என்கிற எண்ணத்திலேயே அவர் இருந்தார்.
அவருக்கு ரத்தக் கொதிப்பு இருக்கிறது என்று நான் கூறினேன். ஆனால் அவரும் அவருடைய மகனும் அதை மறுத்தனர். நான் சொன்னதை அவர்கள் நம்பவில்லை என்பது புரிந்தது. ஆனாலும் என்னுடைய கடமையை நான் செய்தேன். ரத்தக் கொதிப்பு அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளுமாறு கூறினேன். அதற்கு மருந்து எழுதிக் கொடுத்தேன். அடுத்த நாள் அவரை ஆம்புலன்சில் அழைத்து வந்தார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப் பெரியவர் இருந்தார். அவருக்கு மூளையில் ரத்தக்குழாய் வெடித்து ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது. நினைவிழந்த நிலையில் அவர் இருந்தார்.
ஏற்கனவே நான் கொடுத்த மருத்துவம் தவறானதோ என்கிற ரீதியில் அவருடைய மகன் என்னைப் பார்த்தார். ரத்தக் கொதிப்புக்காக நான் கொடுத்த மருந்துகளை அவர் தன் தந்தைக்கு கொடுக்கவில்லை என்பது தெரிந்தது. அந்த மருந்துகளை அவர் வாங்கவே இல்லை. கால் வலிக்கான மாத்திரையை அதிகமாக கொடுத்துள்ளார். பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது அதிக ரத்தக் கொதிப்பு இருப்பது தெரிந்தது. இரண்டு, மூன்று வாரங்கள் சிகிச்சை கொடுத்தோம். அவருக்கு கை, கால்களில் முடக்கம் ஏற்பட்டது.
குறிப்பிட்ட நோய்க்கு மட்டும் சிகிச்சையளிக்காமல், ஒரு நோயாளியை நாம் முழுமையாக பரிசோதிக்க வேண்டும். இதை நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் குடும்பத்தினரும் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்களின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும். அன்று அந்தப் பெரியவருடன் வந்த அத்தனை பேருக்கும் நான் ரத்தக் கொதிப்பு பரிசோதனை செய்தேன். அவர்களில் பலருக்கு ரத்தக் கொதிப்பு இருந்ததே அதற்கு முன்னால் அவர்களுக்கு தெரியவில்லை. வியாதியே வராமல் தடுப்பது தான் சிறந்த வைத்தியம் என்பது என்னுடைய கருத்து. வருமுன் காப்பதே சிறந்தது.