தனிமை என்பது எந்தளவு உளவியல் ரீதியாக பாதிக்கிறது என்பதைப் பற்றி பார்ப்போம். தனிமை என்பது ஒருவர் வீட்டில் தனித்து இருப்பது அல்ல. தனிமையாக இருப்பவர். மக்களோடு கூட கலந்து இருப்பர். ஆனால் மனதளவில் தனிமையாக இருப்பதை தான் தனிமை என்று சொல்வது. தனக்கு என்று யாருமே இல்லை என்று தொடர்ந்து ஒருவர் உணர்ந்தார் என்றால் அது புகை பழக்கத்தை விட கொடியது என்று சொல்லப்படுகிறது. தனிமையின் தாக்கத்தை புரிந்து ஜப்பானில் தனிமைக்கென்று ஒரு அமைச்சரவையே நியமித்து இருக்கிறார்கள். அந்த நாட்டு மக்களில் 40-50 வயதுக்குள் இருக்கும் 1.5 மில்லியன் பேர் தனிமையில் வாழ்கிறார்கள்.
இவர்கள் வீட்டுக்குள்ளே, அடைந்தும் பெற்றோருடன் சார்ந்தும் முழுக்க ஆன்லைனில் தான் இருப்பார்கள். இவர்களால் சமூகத்துடன் ஒன்றி வாழவும் முடிவதில்லை. டிப்ரெஷன், ஏ.டி.எச்.டி போன்ற நோயினால் பாதித்தும் இருப்பார்கள். தனிமை என்பது ஒரு தனி நபரை குறித்தாலும், இதை சமூகமாக சேர்ந்து பார்க்க வேண்டிய விஷயம் . என்னதான் தனிமை சுகத்தை கொடுக்கும், படைப்பாற்றலுக்கு உதவியாக இருந்தாலும், நாம் எல்லாரும் அடிப்படையில் ‘சோசியல் அனிமெல்ஸ்’ தான். அன்றைய சூழலில் பக்கத்து வீட்டு குழந்தைகளுடன் சேர்ந்து ஒற்றுமையாக விளையாடிய காலம் போய் இன்று பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியாமல் இருக்கிறோம்.
இப்பொழுதெல்லாம் பெற்றோர்கள் பொருளாதார காரணங்களுக்காக ஒரு குழந்தையுடன் நிறுத்தி கொள்கிறார்கள். அந்த ஒரு குழந்தைக்கென்று தனி அறை கொடுத்து எல்லா வசதிகளையும் அந்த ஒரு அறையிலேயே கிடைக்கும்படி செய்து விடும்போது அது தேவைகளுக்கென்று வெளியே வர அவசியமே இல்லாமால் ஆகிறது. ஒரு குழந்தையை நன்கு வளர்க்க ஒரு கிராமமே தேவைப்படும் என்று ஒரு பழமொழி சொல்வதுண்டு. அப்படி வெளியே வந்து நான்கு பேருடன் பழகும் போது தான் ஒவ்வொரு வகை மனிதருடன் எப்படி பழக வேண்டும் என்ற அந்த பண்பு குழந்தைக்கு புரியும். இது எந்த வித செயலியோ, ஆன்லைனிலோ கற்றுக் கொள்ள முடியாது. எனவே நாம் ஜப்பான் அளவுக்கு ஒரு அமைச்சரவை வைக்கும் படி செல்லாமல் இப்போதிலிருந்தே தனிமை தாக்கத்திலிருந்து வெளிவர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.