சொரியாசிஸ் பிரச்சனை குறித்து ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விவரிக்கிறார்.
சொரியாசிஸ் நோய் என்பது பரம்பரையாக வரலாம், நம்முடைய சுற்றுப்புற காரணங்களால் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த நோயால் நமக்கு உடலில் மிகுந்த அரிப்பு ஏற்படும். நம்முடைய தோல் மீன் செதில் போல் மாறிவிடும். அல்லது தலையில் ஏற்படும் பொடுகு போன்ற தோற்றத்தை அளிக்கும். இதில் பெரும்பாலும் ரத்தக்கசிவு என்பது இருக்காது. மிக அதிகமாக சொறியும்போது ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பிரத்தியேகமான வாடை எதுவும் இருக்காது.
தலை, நகம், நாக்கு, முட்டி, உள்ளங்கை என்று பல இடங்களில் சொரியாசிஸ் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொருவருடைய தோல் நிறத்தையும் பொறுத்து புண் நிறமும் மாறும். இந்த நோய் சில மாதங்களுக்கு நீடித்து அதன் பிறகு மறைந்துவிடும். சில காலம் கழித்து மீண்டும் வரும். வெடிப்பு ஏற்பட்டு அதனால் அரிப்பு ஏற்படும். ரணம் போன்ற வலி ஏற்படும். குழந்தைகளுக்கும் இந்த நோய் ஏற்படும். அவர்களுக்கு ஏற்படும் புண் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த நோயால் உடல் உணர்ச்சிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
குளிர்ச்சியான வானிலை, தொண்டை மற்றும் தோலில் ஏற்படும் தொற்று, சிகரெட் மற்றும் மது பயன்படுத்துதல், சில மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றின் காரணமாக சொரியாசிஸ் அதிகமாகும் வாய்ப்பு இருக்கிறது. ஹோமியோபதியில் சொரியாசிஸ் எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை முதலில் ஆராய்வோம். அவர்களுடைய மனநிலை, வாழ்க்கை முறை என்று அனைத்தையும் அறிந்துகொள்வோம். இவற்றின் அடிப்படையில் சரியான மருந்துகளை நாம் வழங்கும்போது சொரியாசிஸ் நோயை எளிதாக குணப்படுத்தலாம்.
ஹோமியோபதியில் குணமாவது சற்று தாமதமானாலும் அதற்கான பலன்கள் நீண்ட காலம் இருக்கும். சொரியாசிஸ் என்பது குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் தான். இதனால் சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன், ரத்தக் கொதிப்பு என்று பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே மக்கள் ஆரம்பத்திலேயே இந்த நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சொரியாசிஸ் என்பது பரவக்கூடிய நோய் அல்ல. சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பால் மற்றும் பால் பொருட்கள், கோதுமை, மைதா, தக்காளி, கத்தரிக்காய், மது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். காய்கறிகள், பழங்கள், நட்ஸ், ஒமேகா 3 சத்து நிறைந்த மீன்கள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் வித்தியாசமாக நடத்தாமல் சமமாக மதிக்க வேண்டும்.