வயிற்றுப் புண்ணால் கண்களில் பாதிப்பு ஏற்படுமா? என்ற நமது கேள்விக்கு கண் சிறப்பு மருத்துவர் சசிகுமார் விளக்குகிறார்.
கண் காய்ந்து போகும் பிரச்சனை நிறைய பேருக்கு இருக்கிறது. கண் சிவந்து போவது சாதாரண விஷயம் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் கண்கள் சிவந்தால் உடலில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். இதனால் நிறைய பின்விளைவுகளும் ஏற்படும். நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம், எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோம் என்று அனைத்திற்கும் இதனோடு தொடர்பு உள்ளது. மனரீதியான பிரச்சனைகளும் இந்த பாதிப்புக்கு காரணமாக அமையும்.
வயிறு புண்ணாகும்போது இந்த பிரச்சனைகள் ஏற்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது அதிகம் ஏற்படும். கண் சிவப்பாக இருப்பது, கண்ணில் உறுத்தல் ஏற்படுவது, கண்களில் தண்ணீர் வருவது போன்றவை இதற்கான அறிகுறிகளாக இருக்கும். இதை குணப்படுத்த சொட்டு மருந்து மட்டும் போதாது. கண்களில் உள்ள நீரில் வழுவழுப்புத்தன்மை ஏற்பட வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரில் கண்களுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். சோற்றுக் கற்றாழையை வெதுவெதுப்பான தண்ணீரில் விட்டு அதைக் கண்களில் வைத்துக்கொள்ளலாம். மென்மையான முறையில் கண்களை மசாஜ் செய்யலாம்.
இதனால் வயிற்றில் புண், வயிற்றில் எரிச்சல், தலைவலி, தூக்கம் கெடுதல், மன அழுத்தம், சிறுநீரக கற்கள் உருவாகுதல், சர்க்கரை அளவு அதிகமாதல், மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், பாலிஷ் செய்யப்படாத அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகியவற்றை உண்ணும்போது வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படாது. வயிற்றுக்கும் கண்ணுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. கண்களின் பவர் அதிகமாகும் வாய்ப்புகள் இதனால் ஏற்படுகின்றன. கண்புரை நோய்களும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நிறைய தண்ணீர், சரியான உணவு மற்றும் தூக்கம் ஆகியவற்றால் இதை நாம் சரிசெய்ய முடியும்.