Skip to main content

உடல் எடையினால் மன அழுத்தம் அதிகரிக்குமா? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Krithika Tharan | Diet | Nutrition |

உடல் எடையினால் மன அழுத்தம் அதிகரிக்குமா என்ற நம்முடைய கேள்விக்கு, தான் டயட் சார்ட் கொடுத்த ஒருவரைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

40 வயது பெண்மணி அவருடைய கணவருடன் வந்திருந்தார். தன் குழந்தைகள் தன்னை மதிப்பதில்லை என்று கவலைப்பட்டார். உடல் 100 கிலோவைத் தாண்டி இருந்தது. உடல் குண்டாக இருப்பதாலும் அழகாக இல்லாததாலும் தன்னை யாரும் மதிப்பதில்லை என்று தன் மேலேயே ஒரு தன்னம்பிக்கை இல்லாமல் நிறைய டிப்ரஷனோடு இருந்தார். உடல் அழகை தாண்டி வாழ்க்கை சிக்கல்களால் கூட இருக்கலாம். உணவு மட்டுமே தனக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என்று மூன்று வேளை நன்றாக சுவையாக சமைத்து சாப்பிட்டு உடல் எடை அதிகமாகி 80லிருந்து 100 கிலோ  தொடும் அளவுக்கு போயிருக்கிறார். 

அவர் கணவரும் உடல் இளைப்பதில் தான் சிக்கல் என்று டயட்டிற்காக வந்தார். ஆனால் இந்த பெண்மணிக்கு கூடவே டிப்ரஷன் இருந்தது என்று அவர்கள் வீட்டில் என்னை யாரும் கவனிக்கவில்லை. வயதினால் அவ்வப்போது வரும் இரிட்டேஷன் தான்  என்று சாதாரணமாக விட்டு விட்டனர். ஆனால் இவரோ மருத்துவ சிக்கல் வந்து ஆன்டி டிப்ரசென்ட் மாத்திரை எடுக்கும் அளவு மனப் பிரச்சனை இருந்திருக்கிறது. இதுபோன்ற மாத்திரை ஆரம்பத்தில் எடுக்கலாம். ஆனால் வாழ்நாள் முழுக்க போட முடியாது. அதற்கு முதலில் வாழ்வியல் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று இவருக்கு  முதலில் உடல் எடை குறைப்பதில்  கவனம் கொள்ளப்பட்டது.

முதலில் டயட் சார்ட் போட்டுக் கொடுத்தோம். அடுத்து அது கூடவே CBT என்ற Cognetive Behavior Therapy, மெடிட்டேஷன், மூச்சுப் பயிற்சி, உடற் பயிற்சி என எல்லாவற்றையும் தொடர்ந்து கொடுத்து வர அவர் வாழ்க்கையை இயல்பாக பாசிட்டிவிட்டியோடு பார்த்தார். என் பேச்சை யாரும் மதிப்பதில்லை போன்ற எண்ணத்திலிருந்து மிக அழகாக தினசரி வாழ்வையே ரசித்து ஆத்மார்த்தமாக எல்லா பயிற்சியையும் செய்தார். ஒழுக்கமாக கடைபிடித்ததால் சரியாக 100 நாட்களில் 17 கிலோ குறைத்தார். கூடவே சில ட்ரைனிங்குடன் கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டது. அந்த கவுன்சிலிங்கினால் தான் இவ்வளவு முயற்சிகள் எடுத்து உடல் எடை தன்னால் குறைக்க முடியும் என்று பார்த்ததும் தன்னம்பிக்கை தானாக பிறந்தது. மேலும் தன்னுடைய குழந்தைகளிடம் எப்படி பேச வேண்டும், எவ்வளவு எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. பொதுவாக டீன் ஏஜ் பிள்ளைகளின் பெற்றோர் 40 வயதை ஒட்டித்தான் இருப்பர். எனவே அவர்களோடு ஏற்படாத புரிதலினால் குடும்பத்தில் சில சிக்கல்கள் வந்து நிறைய பெற்றோர்கள் டிப்ரசனுக்கு போவதை அதிகம் பார்க்க முடிகிறது. 

உடலை குணப்படுத்த மனம் சீராகும். மனதை குணப்படுத்த உடல் சீராகும். இப்படித்தான் அவருக்கு தெரப்பி, கவுன்சிலிங், உடற்பயிற்சி என்று இரண்டு புறமும் கொடுத்து தேற்ற, அவர் நன்றாக உடலை மாற்றினார். அடிக்கடி தனக்கு ஓவர் திங்கிங் இருக்கிறது என்று சொல்லும் போதெல்லாம் ஓவர் திங்க் செய்யும்போது மூச்சை கவனியுங்கள். சிந்திக்கும் விஷயம் பயனுள்ளதாக இருந்தால் தொடர்ந்து சிந்தியுங்கள். தேவையில்லாத சிந்தனை என்றால் விட்டுவிடுங்கள் என்று சிறு சிறு டிப்ஸ் கொடுத்து அவரை சரி செய்தோம். உடல் எடை அதிகம் இருக்கிறது என்பது ஆரோக்கியமற்ற செயல்தான். அதற்கு நாம் நடவடிக்கை எடுத்துதான் ஆக வேண்டும். ஆனால் அதற்கு தாழ்வு மனப்பான்மை கொள்வது சரியாகாது. பொதுவாக பெண்களுக்கு முக்கியமாக 40 வயதிற்கு பின் உடல் எடை கூடுவது போன்ற தொந்தரவு பல காரணங்களால் வரலாம்.

சில பேருக்கு குழந்தை பிறந்தவுடன் அதை குறைக்க முடியாமல் போகலாம். சில பேர் பாலூட்டும் போது நிறைய சாப்பிட்டு விடுவர். அதை குறைக்க முடியாமல் போகலாம். சத்து குறைபாட்டினால் அடிக்கடி பசி எடுத்து தவறான உணவுகளை எடுப்பதினால் வரலாம். நரம்பு பிரச்சனை, ஹார்மோனல் இம்பேலன்ஸ் மற்றும்  வீட்டில் இருக்கும் சில பிரச்சினைகளால் கூட டிப்ரஷன் அதிகமாகி உடல் எடை போடலாம். சின்ன சின்ன ஸ்டிரஸ் லெவல்கள் வாழ்க்கையில் இயல்புதான். அதனால் நொந்து போகாமல் துணிவோடு செய்யும் போது எல்லாமே சாத்தியம். உடல் எடையோ எந்த தொந்தரவோ எதுவானாலும் அவர்களுக்கு துணிவையும் தன்னம்பிக்கையை மட்டும் கொடுத்துவிட்டால் போதும். அடுத்து அந்த பிரச்சனையை சரி செய்ய அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.