Skip to main content

லிக்விட் டயட் உடலுக்கு பாதிப்பா?  - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

 kirthikatharan  - Liquid Diet 

 

லிக்விட் டயட் எனப்படும் திரவ உணவுகளை நான் பரிந்துரைக்க மாட்டேன். ஆபரேஷன் செய்து, உடல் எடையைக் குறைக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு திரவ உணவு என்பது கட்டாயமாகிறது. அவர்களுக்கு சரியான அளவில் புரோட்டின் உள்ளிட்ட சத்துக்களை வழங்க வேண்டும். காலையில் பாதாம், நட்ஸ் ஆகியவற்றை வழங்கலாம். மதிய நேரங்களில் சூப், ஜுஸ், காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். இரவு நேரங்களில் சூப் எடுத்துக்கொள்ளலாம். எந்தெந்த உணவுகளை திரவமாக எடுத்துக்கொள்ள முடியுமோ அவற்றை அவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும். 

 

குடலை சுத்தம் செய்வதற்காக சிலர் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வார்கள். இனிமா போன்றவற்றையும் கொடுத்து குடலை சுத்தம் செய்வார்கள். லிக்விட் டயட் எனப்படும் திரவ உணவு முறை மருத்துவத்துறையில் நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல. திரவ உணவுகளால் தவறான பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்றாலும், திட உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ளும் முறையை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. திரவ உணவு முறைக்கான ஆதரவாளர்கள் பலர் இருக்கின்றனர். 

 

ஆனால் இதில் சிக்கல்களும் இருக்கின்றன. மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே இவற்றை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாமே தவிர, வாழ்க்கை முழுவதும் இவ்வாறு செய்வது தவறு. ஒவ்வொரு வாரத்துக்கும் ஒவ்வொரு விதமான டயட்டை பின்பற்றுவது உடல் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உடல் இளைப்பதற்காக சிலர் இதைச் செய்கின்றனர். அது தவறு. திரவ உணவு குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டபோது, அதில் பங்குகொண்டவர்களுக்கு உடலில் கொழுப்பு குறைந்துள்ளது. 

 

உடல் இளைப்பு என்பதும் ஓரளவுக்கு நடந்திருக்கிறது. ஆனால் அவர்கள் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர். நாமாக இவற்றை எடுத்துக்கொள்வது தவறு. ஏனெனில் எந்த உணவில் எவ்வளவு சத்து இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. உணவுக்குழாய் மூலம் கொஞ்சம் கொஞ்சமாகவே வயிறு வரை உணவு பயணிக்கும். சரியான அளவில் உணவு உள்ளே செல்லாமல் இருந்தால், இந்த செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். எனவே உடல் இளைப்பதற்காகவோ மற்ற காரணங்களுக்காகவோ திரவ உணவு முறையை நான் யாருக்கும் பரிந்துரைப்பதில்லை.