நிறவெறியை முறித்தெறிந்து, அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்த ஆப்ரஹாம் லிங்கன் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்த காரணத்தை வைத்துக்கொண்டு அவரை ஏளனப்படுத்தியவர்கள் ஏராளம். ஆனால் அந்த உலகப் பெருந்தலைவன் தன் கடும் உழைப்பாலும் ஓயாத படிப்பாலும் வரலாற்றில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அப்படித்தான் மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த காரணத்தை வைத்துக்கொண்டு கலைஞரையும் அவர் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தியே தீரவேண்டும் என்று திட்டங்கள் தீட்டியதையும் செயல்படுத்தியதையும் கண்டு கதிகலங்கியவர்கள் இட்டுக் கட்டிய கதைகளை வேறு எந்தத் தலைவனாலும் தாங்கிக்கொண்டு தடைகளைக் கடந்திருக்க முடியாது. இதுதான் உண்மை.
உலகை வியக்க வைத்த வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதமராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப் பட்டவர். தன்னிகரற்ற பேச்சாளர், எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர். நகைச்சுவை உணர்வோடு உடனுக்குடன் பதிலளித்து எதிர்க்கட்சியினரை வாய்மூட வைத்தவர்.
அவர் மீது ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞருக்கு ஈர்ப்புண்டு. ஒருமுறை இலண்டன் நாடாளுமன்றத்தில் சர்ச்சில் உரைநிகழ்த்தும்போது இந்த அவையில் பாதி உறுப்பினர்கள் "முட்டாள்கள்' என்றார். உடனே அவையில் கொந்தளிப்பு ஏற்பட்டது. சர்ச்சில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்கள்.
அலட்டிக் கொள்ளாத சர்ச்சில் உடனடியாக, "மன்னிக்க வேண்டும். இந்த அவையில் ஐம்பது விழுக்காடு உறுப்பினர்கள் "புத்திசாலிகள்' என்றார். இப்படிப்பட்ட அவரின் அறிவுக்கூர்மை வியக்கவைப்பது. அப்படித்தான் ஒருமுறை எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர், "கழகத் தொண்டர்கள் கும்பகர்ணர்கள்'’என்று ஏளனமாகப் பேசினார். அடுத்தநொடி கலைஞர் சிரித்துக்கொண்டே சொன்னார். “"என் தம்பிகள் தூங்கினால் கும்பகர்ணன். எழுந்தால் இந்திரஜித்.' அதற்கு மேல் அவரால் பேச முடியுமா?
கலைஞரின் நகைச்சுவை இயல்பானது. உடனுக்குடன் உதிர்வது. கேட்போரை வியக்க வைப்பது. சிந்திக்க வைப்பது. இலக்கிய மேடையென்றாலும், அரசியல் மேடையென்றாலும் அவர் பேச்சில் வந்து விழுகிற நகைச்சுவைக்கு வசப்பட்டு எதிர்க்கட்சியென்றாலும் வாய்விட்டுச் சிரிப்பார்கள்.
பெருந்தலைவர் காமராசர் முதல்வர். கலைஞர் எதிர்க்கட்சித் துணைத்தலைவர். சட்டமன்ற உறுப்பினர்ஒருவர், "திருச்சியில் ஊர்வலம் வந்த காமராசர் மனுக்கொடுக்க வந்த பொற்கொல்லர் ஒருவரைக் கன்னத்தில் அறைந்தார்'’என்று குற்றம்சாட்டினார். உடனே கோபத்தோடு எழுந்த பெருந்தலைவர், "நான் கன்னத்தில் அடிக்கவில்லை'’என்று மறுத்தார்.
சட்டென்று எழுந்த கலைஞர் கேட்டார், "அப்படி யென்றால் எங்குதான் அடித்தீர்கள்?' என்றார் சிரித்துக்கொண்டே. குபீர்ச் சிரிப்பு சட்டமன்றத்தைக் கலகலப்பாக்கியது. பெருந்தலைவரும் சிரித்தார். உடனுக்குடன் பதிலளிப்பதில் வல்லவர் கலைஞர் என்பதை வரலாறு நெடுகக் காணமுடியும். திராவிட இயக்கம் திடீரென்று முளைத்த காளான் கட்சிகளைப் போல எழுந்த இயக்கமா என்ன? எத்தனையோ இழிமொழிகள், போராட்டங்கள், எதிர்ப்புகள், ஏளனங்கள், வஞ்சகச் செயல்கள், துரோகங்கள் என்று எல்லாவற்றையும் உடைத்தெறிந்து எழுந்துவந்த இயக்கம். பண்ணைகளும் பணக்காரர்களும், ஆண்டைகளும், ஆதிக்கச் சக்திகளும் ஆட்டிப் படைத்த அரசியல் உலகைச் சாமான்யனும் வந்து சரித்திரம் படைக்கமுடியும் என்பதைச் சாதித்துக் காட்டுவதற்காக எழுந்த இயக்கம்.
- சென்னிமலை தண்டபாணி