பெண்களுக்கு ஏற்படுகிற தொற்று நோய்கள் பிரச்சனைகள் பற்றி நக்கீரன் நலம் யூடியூப் சேனலில் தொடர்ச்சியாக பிரபல மகப்பேறு மருத்துவர் ஸ்ரீகலா பிரசாத் பேசி வருகிறார். அந்த வகையில் பெண்கள் சிறுநீரை அடிக்கடி வெளியேற்றாமல் அடக்கிக் கொள்வதால் வரும் சிக்கல்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
காலை எழுந்தவுடனேயே சிறுநீர், மலம் கழித்துவிட வேண்டும். அலுவலகம், பள்ளி அவசரமாக செல்வதற்காக கழிவை வெளியேற்றாமல் சென்றுவிடுகிறவர்களுக்கு அவை இறுகும் தன்மையாய் மாறி விடுகிறது. அதை தவிர்க்க காலையிலேயே சிறுநீர், மலம் கழித்து விட வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்; ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை சிறுநீர் வெளியேற்ற வேண்டும். பள்ளியில், அலுவலகத்தில் கழிப்பறை சரியாக இல்லை, சுத்தமாக இல்லை என்று காலையில் வீட்டில் கழித்துவிட்டு போகிறவர்கள் மாலை வீட்டிற்கு வந்து தான் யூரின் போகிறார்கள்.
இந்த பழக்கம் ஏகப்பட்ட பெண்களிடம் இருக்கிறது. இதற்காக பள்ளியில், அலுவலகங்களில் தண்ணீர் குடிக்காமலேயே இருக்கிறார்கள். தண்ணீர் குடித்தால் தானே யூரின் போக வேண்டிய சூழல் வரும். அதற்காக குடிக்காமலேயே இருக்கிறார்கள். இதனால் சிறுநீர்ப்பை விரிவடைந்து பலகீனம் அடையும். பயிலும் பள்ளி, கல்லூரியில்... பணிபுரியும் அலுவலகங்களில் சுத்தமாக பராமரித்துக் கொள்வது அதை பயன்படுத்துபவர்களின் கடமை. அதை நீங்கள் தான் வாய்ப்பு ஏற்படுத்தி சரி செய்துகொள்ள வேண்டும்.
கழிப்பறை பராமரிப்பின்றி சுத்தமாக இல்லாமல் இருக்கிறது என்று விட்டுவிட்டால் அதனால் நோய்த் தொற்று உண்டாகி பாதிப்படைவது பெண்கள் தான். சிறுநீரை அடக்குவதால் பிறப்பு உறுப்பை சுற்றி ஏற்படுகிற அரிப்புத் தன்மை, எரிச்சல், வலிகளுக்கு நீங்களாகவே மெடிக்கல்லில் மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது. மருத்துவரை சந்தித்து சரிசெய்து கொள்ள வேண்டும். மீண்டும் சிக்கல் வந்தால் மருத்துவர் கொடுத்த அதே மருந்தை மெடிக்கல்லில் வாங்கி சாப்பிடக்கூடாது. யூரினரி இன்ஃபெக்சனின் தன்மை ஒவ்வொருவருக்கும் காலகட்டத்திற்கும் தகுந்தாற்போல மாறுபடும்.
நீங்களாகவே மருந்து எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் அது வேறு வகையான உடல் உபாதைகளை கொண்டு வந்து விடும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீர்ச்சத்து, நார்ச்சத்து உள்ள உணவை எடுத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் இரண்டு லிட்டர் குடியுங்கள். சிறுநீர் கழித்த பிறகு உறுப்பையும் இடத்தையும் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்.