இன்னும் ஹாசினி மரணத்தின் வலியும் தஸ்வந்த் மீதான கோபமும் நமக்கு முழுமையாக நீங்கவில்லை. அதற்குள் அடுத்த அதிர்ச்சி... சென்னையில் 12 வயது சிறுமியை 17 பேர் வன்கொடுமை செய்த செய்தி நம்மை வருத்தமும் வேதனையும் கொள்ள வைத்துள்ளது. இத்தகையவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பது அரசின் கடமை. நாம் நம் குழந்தைகளைப் பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என்று மனவள நிபுணர் டாக்டர் ஷாலினியிடம் கேட்டோம்...

யாரிடம் கவனமாக இருக்கவேண்டும்...
சமுதாயத்தில் நல்லவன், தத்துவங்களை பேசுபவன், பக்திமான் என்றெல்லாம் நேர்மறையாகப் பெயர் எடுத்தவர்கள்தான் பெரும்பாலும் குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்வதை பார்க்கிறோம். மற்றபடி முரட்டுத்தனமானவர்கள், பொது விஷயங்களில் பங்கு கொள்பவர்கள் தன் கவர்ச்சியால் பலரை கவர முடியும் என நம்பிக்கை இருப்பதால் அவர்கள் அவர்களுக்கு தகுதியான, சரிசமமான பெண்களுடன் உறவில் ஈடுபட முடிகிறது. தனக்கு சரிசமமான பெண்களை கவர முடியாதவர்கள்தான் குழந்தைகளை இலக்காகப் பார்க்கின்றனர். அதனால் 'அனைவரிடமுமே கவனமாகத்தான் இருக்க வேண்டு'மென்று குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.
பெண் குழந்தைகளிடம் எதையெல்லாம் பேச வேண்டும்...
இந்த சம்பவத்தில், நடந்த விஷயத்தை பல மாதங்களாக குழந்தை பெற்றோரிடம் கூட சொல்லாமல் இருந்திருக்கிறது. குழந்தையிடம் கை, கால் என்று வெளிப்படையாக அறிமுகப்படுத்துவது போலவே, பேசுவது போலவே அனைத்து உறுப்புகளையும் அறிமுகப்படுத்த வேண்டும், அது குறித்தும் பேச வேண்டும். அது 'டர்ட்டி பார்ட்' என்ற எண்ணத்தை குழந்தைக்கு ஊட்டக்கூடாது. அதனால்தான் குழந்தைகள் அதுகுறித்துப் பேச தயங்குகின்றன. யாராவது தங்களை தவறாக அணுகினாலும் சொல்லத் தயங்குகின்றன. குழந்தைகள் எந்த விஷயத்தைக் குறித்தும் பெற்றோரிடம் பேசுவதற்கான ஸ்பேஸை பெற்றோர் தரவேண்டும். பொதுவாக பெண் குழந்தைகளை நாம், "உனக்கு என்ன தெரியும் நீ பொண்ணுதான", என்று பேசுவோம். இதைப் பார்க்கும் குழந்தைகள், பெண் ஏதோ ஒரு போகப் பொருள் என்றோ, தன்னைவிட மதிப்பு குறைந்தது என்றோ நினைத்து விடுகின்றனர். இதனாலும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன.
ஆண் குழந்தைகளுக்கும் சொல்ல வேண்டும்...
பொதுவாக பெற்றோர்கள், 'தனது குழந்தை சந்தோசமாக இருக்க வேண்டும். நம் பெற்றோர் நமக்கு அளிக்காததை நாம் நம் பிள்ளைகளுக்கு அளிக்க வேண்டும்' என்று சந்தோசத்திற்கே முக்கியத்துவம் தருகின்றனர். இரண்டாவது, குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்று அதற்கு முக்கியத்துவம் தருகின்றனர். அடுத்து, குழந்தைகளின் சாதனைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால் இதைத்தவிர அடிப்படையான விஷயங்களான ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த விஷயங்களை சொல்லித்தர மறந்துவிடுகின்றனர். ஒன்று, அதை பள்ளி சொல்லித்தர வேண்டும் என நினைக்கிறோம் அல்லது அது வாழ்க்கைக்கு அவசியமில்லை என்று நினைக்கிறோம். இதுதான் நாம் தொடர்ந்து செய்துவரும் தவறு. அதனால் நாம் குழந்தைகளுக்கு அறத்தை, ஒழுக்கத்தை, பெண்களை மதிப்பதை கற்றுத்தர வேண்டும்.