Skip to main content

சிறுநீர் கற்கள் எப்படி உருவாகிறது? - ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்கம்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

 How are urinary stones formed? - Explained by Homeopath Aarti

 

சிறுநீரக கற்கள் எப்படி உருவாகிறது; உடலில் அப்படியான சிக்கலை எதிர்கொண்டால் அதற்கு ஹோமியோபதி மருத்துவம் தருகிற விளக்கம் என்ன என்பது குறித்து நமக்கு ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விளக்குகிறார்.

 

சிறுநீரக கற்கள் பலருக்கு இருக்கிறது. நாம் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பதால் ஏற்படுபவை தான் சிறுநீரக கற்கள். அவற்றிலும் பல வகைகள் இருக்கின்றன. பரம்பரையாக வருவது, மருத்துவரை அணுகாமல் நாமாக முடிவெடுத்து மருந்துகளை எடுத்துக் கொள்வது போன்ற காரணங்களினால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படலாம். குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, உடல் பருமன் ஆகிய காரணங்களினாலும் இது ஏற்படலாம். இதற்கான முக்கிய அறிகுறி அடிவயிற்றில் வலி ஏற்படுவது.

 

சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, வாந்தி, சிறுநீரில் நாற்றம் போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்படும். கற்களின் அளவைப் பொறுத்து சிகிச்சை முறைகள் மாறும். ஹோமியோபதியில் இதற்கு நல்ல மருந்துகள் இருக்கின்றன. ஹோமியோபதி முறையில் வலியே இல்லாமல் மருந்துகளின் மூலமாகவே சிறுநீரக கற்கள் பிரச்சனையை குணப்படுத்தலாம். சிலருக்கு தொற்று காரணமாக காய்ச்சலும் வரலாம். ஹோமியோபதி மருத்துவத்தில் இதற்கு மருந்துகளும் மாத்திரைகளும் வழங்கப்படும். 

 

சிலருக்கு இரண்டே நாட்களில் இந்தப் பிரச்சனை சரியாகும். சிலருக்கு ஒரு வருடம் கழித்து கூட சரியாகும். நோயாளிகளின் உடல்வாகு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றால் குணமாகும் கால அளவில் மாற்றங்கள் ஏற்படும். சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்க பிடிக்கவில்லை என்றால் எலுமிச்சை சாறு குடிக்கலாம். இளநீர் குடிக்க வேண்டும். நிறைய பழங்கள் சாப்பிட வேண்டும். வைட்டமின் சி உணவுகளை உண்ண வேண்டும். கொழுப்புச் சத்து குறைவாக இருக்கும் பால், தயிர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். மட்டன், சிக்கன், மீன், நட்ஸ், துரித உணவுகள், காபி, டீ ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
 

 

 

Next Story

டாஸ்மாக்கிற்கு இருக்கும் எதிர்ப்பு கூட இதற்கில்லை - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
  Dr Radhika | Mobile phone | Youngsters

வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு  மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே  நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை. 

நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி  நம் உடல் சரியாக பராமரிக்கும். 

ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான்.  உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.

Next Story

ஒழுங்காக தூங்காவிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Dr Arunachalam | Insomnia |

ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரமாவது தூங்க வேண்டும். ஆனால் நாம் வாழும் இன்றைய நவீன உலகில், நம் நேரத்தின் தேவைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை, தவிர்க்கமுடியாத சங்கிலியாக அது தூங்கும் நேரத்தையும் சேர்த்து கடன் வாங்கிகொள்ளத்தான்  செய்கிறது. அமெரிக்க மனநல சங்கத்தின் படி, மூன்றில் ஒரு பங்கு மக்கள் தூக்கமின்மை அறிகுறிகளைப் புகாரளிப்பதாகவும், 6 முதல் 10 சதவீதம் பேர் தூக்கமின்மை சிகிச்சையை சந்திக்கும் அறிகுறிகளையும் கொண்டுள்ளனர். ஒரு நாள் அல்லது இரண்டு நாள்  தூக்கம் கெடுவது ஒரு முக்கியமான பிரச்சனை அல்ல. ஆனால் அதுவே வாரங்களாக, மாதங்களாக தொடரும்போது தான் அது அந்த தனிபட்ட நபரை மட்டுமல்லாது, அவரை சார்ந்த முழு குடும்பத்தின் இயக்கவியலையும் பாதிக்கிறது. இப்படியான தூக்கமின்மையின் காரணிகளையும், விளைவுகளையும், பற்றி மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடன் சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு.. 

தூக்கமின்மையால் இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரும் பாதிப்படைய பெரிய காரணங்கள் என்ன ? அதை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் ?

அக்கியூட் இன்சோம்னியா என்று குறிப்பிடுவது ஒரு இரவு முழுக்க தூங்காமல் இருப்பது, ஒரு சில வாரங்களோ அல்லது, வாரத்திற்கு 3 நாள் என்று மூன்று மாதங்கள் நீடித்து இருக்கும் நிலையை தூக்கமின்மைக்குள்  வகைப்படுத்தலாம். தூக்கம் என்பது நம் செல்போன்க்கு ரீச்சார்ஜ் செய்வது போன்று. தூக்கம் இல்லையென்றால் ஒருநாள் சமாளிக்கும் உடம்பு, அதுவே வாடிக்கையாகும் போது நம் சிந்தனை வேகம் குறைவது முதல் மனஎரிச்சல் வரை  வருகிறது. 

நான் 1994ல் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரிந்தபோது ஒரு நோயாளி மட்டுமே காணப்பட்ட நிலையில், நைட் ஷிப்ட் , ஐ .டி  நிறுவனங்கள் தொடங்கிய காலம் பிறகு, தூக்கமின்மையால் வரும் அவ்வளவு நோய்களையும் பார்க்க வேண்டி வருகிறது. தண்ணீரை எவ்வாறு முறைப்படுத்தி காய்ச்சி குடிக்கவேண்டும் என்று நோயாளிகளுக்கு எடுத்துரைக்கும்போதே, இவ்வாறு அனுப்பிவிட்டீர்கள் என்றால், உங்களுக்கு நோயாளிகளே வரமாட்டார்கள் என்று என்னிடம் கருத்துகள்  வந்தது. இது இல்லையென்றால் இன்னொரு நோய் வரும் என்று பதிலளித்தேன். அதுபோல இப்போது பொது வெளியில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து, அது சிறுநீர் கல் பிரச்சனைகளுக்கு வழிசெய்து, மருத்துவமனைக்கு சென்று அளவுக்கு அதிகமாக பணம் செலவழிக்க வேண்டியுள்ளது.

எனவே, நாம் என்னதான் கற்பித்தாலும், அது வேறொரு பாதையைதான் சென்று அடைகிறது. தூக்கமின்மை நோயாளிகளை அதிகமாக இன்று பார்ப்பது  போல் 1994ல் பார்த்தது இல்லை. காலத்திற்கேற்ப, மனிதன் தன் உடலை புரிந்துக்  கொள்ளாத வரைக்கும் நோய்  வந்து கொண்டே இருக்கும். 

தூக்கமின்மை வராமல் இருக்க நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

நம் உடல் ஒரு கிரோனோலோஜிக்கல் கிளாக்கின்  கட்டளைப்படி தான் இயங்கி வருகிறது. அந்த 24 மணி நேரம் இயங்கும் கடிகாரத்திற்கு ரிதம் தான் பிடிக்கும்.  எப்படி காலை, மாலை என்று இரு வேளையும்  சூரியன் உதிக்கும் நேரமும், அஸ்தமன நேரம் தவறாமல் நடப்பதை போன்றது அது. பகலில் தூங்கி, இரவில் விழிக்கும் விலங்குகளைப்  போன்று அல்லாது, இரவில் தூங்கி பகலில் 12 மணி நேரம் இயங்கும் விலங்குகளை சேர்ந்தவர்களே மனிதர்கள். நம் உடலே இயற்கையின் ரிதமோடு ஒன்றியது தான். சூரியனால் உதயமாகும் மலர்கள் முதல், கண்கள் தெரியும் விலங்குகள் வரை,  சூரியன் உதித்தலோடு வாழ்க்கையை தொடர்ந்து, சூரியன் மறையும் வரை முடித்து 12 மணி நேரம் ஓய்வெடுக்கும் வகையாகத்தான், நம் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. 

தூங்கினால் மட்டும்தான் பல உறுப்புகள் சரியாக இயங்கும். 3 மாதம் தொடர்ந்து தூங்காத ஆண்களுக்கும், 6 மாதம் தொடர்ந்து தூங்காத  பெண்களுக்கும், வாழ்க்கை முறை மாற்ற நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். மரணங்கள் அதிகமாக உலகில் காணப்படுவதற்கு இது போன்று தொற்று அல்லாத நோய்களே  பெருமளவு காணப்படுகிறது. இதற்கு தூக்கமின்மை மிக முக்கியமாக இருக்கிறது. மன அழுத்தம் அல்லது வேலையை சரியாக கையாளுதல் இல்லாமல்  இருப்பது போன்ற காரணியாக தூக்கமின்மைக்கு  இருக்கலாம்.  

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் திருமணமான பெண்களையும் , ஆண்களையும் இது மிகவும் பாதித்தது. இரவெல்லாம் அலுவலகத்தில் மேலாளரோடு வேலை நிமித்தமாக வாக்குவாதம் செய்கிறார்கள் என்றெல்லாம் பாதிக்கப்பட்ட  அவரவர் தந்தைமார்கள் என்னிடம் கூட்டி வருவார்கள். இதுபோன்று காலகட்டத்தில் உழைக்கும்போதும், குறிப்பாக கல்வியும் இதில் முக்கிய பங்காக இருக்கிறது. என்னைப்பொறுத்த வரை ஒரு தொழிலை செய்வதற்கு அவனின் ஈடுபாடு தெரிந்து வாய்ப்பை தருவதே முக்கியமானதாக இருக்க முடியுமே தவிர்த்து, மனப்பாடம் செய்து வென்று ஒரு சமுதாயத்தில் நல்ல தொழில் வல்லுநராக இருப்பது கேள்வி குறியாகவே இருக்கிறது. 

ஒரு தாயார், தன் மகள் இரவு 12 மணி நேரம் தாண்டி படிப்பதாகவும், முடி கொட்டுவதாகவும் சமீப காலத்தில் நிறைய பேர் என்னிடம் வருகிறார்கள். இப்படி இரவு உறங்காமல் படித்து கொண்டே இருந்தால் பகலில் ஒன்றுமே நினைவில் இருப்பதில்லை. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவரவர் வாழ்க்கையை எவ்வாறு தயார்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே இது விளைகிறது. எனவே தூக்கம் என்பது உடலை பொறுத்த வரை, மிக மிக அத்தியாவசியமான  தேவை. எனவே தூக்கமின்மையை விட்டு நல்ல தூங்கும் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளுதல் வேண்டும்.