ஹோமியோபதி சிகிச்சையின் மகத்துவங்கள் குறித்து நம்மிடம் ஹோமியோபதி மருத்துவர் ஆர்த்தி விரிவாக விவரிக்கிறார்.
ஹோமியோபதி மருத்துவம் குறித்த புரிதல் தற்போது மக்களுக்கு அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் இதற்கு ஒரு முக்கிய காரணம். இரண்டாவது பெரிய மருத்துவ முறை ஹோமியோபதி தான் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. மக்கள் தொகையில் 59 சதவீதத்தினர் ஹோமியோபதி மருத்துவ முறையின் பக்கம் நகர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கோவிட் காலத்திற்குப் பிறகு அலோபதி தவிர்த்த மற்ற மருத்துவ முறைகள் குறித்த புரிதல் மக்களுக்கு அதிகம் வந்துள்ளது.
இவ்வளவு மருத்துவ முறையில் இருக்கின்றனவா என்று மக்கள் இப்போது ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். முடிந்த அளவு அறுவை சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும் என்பதே ஹோமியோபதி சிகிச்சையின் நோக்கம். அலோபதி மருத்துவர்கள் முதலில் அறுவை சிகிச்சையைத் தான் வலியுறுத்துவார்கள். அதன் மூலம் நோய் பாதிப்பு மீண்டும் மீண்டும் வந்துகொண்டே தான் இருக்கும். ஹோமியோபதியில் மருந்துகள் எடுத்துக்கொண்டு நாம் குணமடைந்து விட்டால் அதன்பிறகு அந்த நோய் அறிகுறிகள் நமக்கு ஏற்படாது.
எமர்ஜென்சி காலத்தில் அலோபதியைத் தேர்வு செய்வதில் தவறில்லை. ஹோமியோபதியில் விரைவாக குணப்படுத்தும் மருந்துகள் ஏராளமாக இருக்கின்றன என்பது இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்தியவர்களுக்குத் தெரியும். ஹோமியோபதி தொடர்பான தீவிரமான ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஜெர்மனியில் இருந்து பிறந்தது தான் ஹோமியோபதி என்றாலும் அங்கு இப்போது ஹோமியோபதி அவ்வளவாக நடைமுறையில் இல்லை. ஆனால் மற்ற பல நாடுகளில் இருக்கிறது. ஹோமியோபதி கல்லூரிகளும் பல நாடுகளில் இருக்கின்றன.
ஒப்பீட்டளவில் இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவம் அதிகம் பிரபலமாக இருக்கிறது. ஹோமியோபதியை உலகளவில் பரப்பும் முயற்சியில் இந்தியர்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.