ஒரு மனிதன் சிறப்புற்று வாழ வேண்டுமென்றால் அவனுக்கு நல்ல சிந்தனைகள் இருக்க வேண்டும்.நற்சிந்தனை என்றால் பொறாமை, பொய், திருடுவது போன்றவற்றை அருகே நெருங்க விடாமல் இருப்பது என்று சொல்லலாம். இதுபோன்ற தவறான எண்ணங்களும், நடத்தைகளும் ஒதுக்கித் தள்ளப்பட்டு விட்டாலே, நல்ல எண்ணங்கள் தானாகவே வந்து ஒட்டிக் கொண்டுவிடும். உதவி செய்தல், நன்மை செய்தல், உண்மை பேசுதல், நேர்மையோடு இருத்தல் போன்றவற்றை மனதில் உறுதியாகக் கொண்டிருந்தாலே நல்ல சிந்தனைகள் தானாகவே உள்ளுக்குள் சுரக்கும். இவ்வாறான நற்சிந்தனைகளைக் கொண்டிருந்தால் வாழ்வில் அமைதி கிடைக்கும். மகிழ்ச்சி பெருகும். உலகம் போற்றிப் புகழும். முன்னேற்றம் வந்து சேரும். அனைத்திற்கும் மேலாக உங்கள் லட்சியமும், நோக்கமும் நிச்சயமாக நிறைவேறும். வெகு காலத்திற்குப் பிறகு தங்கள் குருவைப் பார்ப்பதற்காக மூன்று சீடர்கள் அவரது ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்களை வரவேற்று பல விஷயங்கள் குறித்து குரு அளவளாவிக் கொண்டிருந்தார்.
அப்போது நல்ல சிந்தனைகளைப் பற்றிப் பேச்சு எழுந்தது. நற்சிந்தனை என்றால் என்னவென்று சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்ததைப் பற்றி குருவிடம் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு நிமிஷம் இருங்கள். இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார் குரு. சற்று நேரத்தில் ஒரு குடுவையில் காபியும், பலவிதமான காபிக் கோப்பைகளையும் கொண்டு வந்தார். அங்கிருந்த மூன்று சீடர்களுக்கு மொத்தம் ஒன்பது கோப்பைகள் இருந்தன. அவற்றில் மூன்று தங்கக் கோப்பைகளாகவும், மூன்று வெள்ளிக் கோப்பைகளாகவும், மூன்று பீங்கான் கோப்பைகளாகவும் இருந்தன. சீடர்களிடம், குடுவையில் இருந்து காபியை ஊற்றி நீங்களே குடித்துக் கொள்ளுங்கள் என்றார். சீடர்களும் ஆளுக்கு ஒரு தங்கக் கோப்பையை எடுத்து அதில் காபியை ஊற்றிப் பருகத் தொடங்கினர். அப்படியே மீண்டும் நற்சிந்தனை பற்றி அவர்கள் பேசினர்.அப்போது குறுக்கிட்ட குரு, நீங்கள் மூன்று பேருமே விலை உயர்ந்த தங்கக் கோப்பையைத் தான் எடுத்து, அதில் காபியை ஊற்றிப் பருகுகின்றீர்கள். காபி குடிக்க உங்களுக்கு அதிக விலையுள்ள தங்கக் கோப்பைகள்தான் தேவைப்பட்டுள்ளது. அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள். ஆனால் நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் குடிக்கப் போவது காபியையா, காபி கோப்பையையா? என்று கேட்டார்.
காபியைத்தான் குருவே என்றனர் சீடர்கள். ஆனால் காபி சுவையாக இருக்கிறதா, இல்லையா என்பதைப் பற்றி எதுவும் நினைக்காமல் காபி கோப்பையில்தான் உங்கள் கவனத்தைச் செலுத்தினீர்கள். உங்கள் உடம்பில் கலந்துவிடப் போகிற காபியைவிட, வெளியே வைக்கப் போகிற கோப்பையில்தான் உங்கள் கவனம் இருக்கிறது.வாழ்க்கையை காபியோடு ஒப்பிடலாம். இதில் வேலை, பணம், மதிப்பு, பொறுப்பு போன்றவை அனைத்தும் கோப்பைகள் மட்டுமே. வாழ்க்கையில் நாம் வாழ வேண்டும் என்பதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகள் மட்டுமே இவை. இவற்றால் நமது வாழ்வின் தரம் எந்த வகையிலும் மாற்றம் பெறாது என்றார் குரு. அதாவது நம்மைப் பொறுத்தமட்டில் கோப்பைகள் என்னும் வாழ்க்கைக்குத் தேவைப்படும் கருவிகள் மீது மட்டுமே கவனம் வைக்கிறோம். ஆனால் காபி என்னும் வாழ்க்கையின் சுவையை சரியாக உணரத் தவறிவிடுகிறோம்.நற்சிந்தனை என்பது வெறும் ஆடம்பரக் கவர்ச்சிக்கு மயங்குவதாக இருக்காது. வழக்கமான பீங்கான் கோப்பையில் குடித்தாலும் காபியின் சுவை அப்படியேதான் இருக்கும். பருகும் பாத்திரத்தைப் பொறுத்து காபியின் தன்மை மாறாது.நற்சிந்தனை என்பது அடுத்தவருக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைப்பது கூடாது. அது நமக்கும் இருக்க வேண்டும்.