குடும்ப ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்குகிறார்
தனிமனித ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் குடும்ப ஆரோக்கியம். குடும்பத்தில் உள்ள ஒரு மனிதர் வியாதியால் படுக்கும்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரை கவனித்துக் கொள்கின்றனர். அவர் மீது மிகுந்த அன்பு, பாசம் செலுத்துகின்றனர். நிறைய பணம் செலவு செய்கின்றனர். இதன் மூலம் அவர் குணமடைகிறார். இது தமிழ்நாட்டின் வரம். அதே நபர் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ, குடும்பத்தில் உள்ள இன்னொரு நபர் பாதிக்கப்பட்டாலோ, அப்போது தான் கஷ்டம் தெரியும்.
ஏனெனில், மீண்டும் செலவு செய்வதற்கு பணம் இருக்காது. இதுபோன்ற பிரச்சனைகளை நாங்கள் பல நோயாளிகளிடம் பார்க்கிறோம். குடும்ப டாக்டர் என்கிற கான்செப்ட் முன்பு ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்தது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் நம்பத்தகுந்த, அர்ப்பணிப்பு கொண்ட ஒரு டாக்டர் இருப்பார். குடும்பத்தில் உள்ள அனைவருடைய வரலாறு குறித்தும் அவருக்குத் தெரியும். குடும்பத்தில் ஒருவருக்கு திருமணம் செய்துவைப்பதற்குக் கூட மருத்துவரின் ஆலோசனையைப் பெறும் குடும்பங்கள் எல்லாம் இருக்கின்றன.
பொறுப்பான ஒரு மருத்துவரின் ஆலோசனையைத் தொடர்ந்து பெறுவது நல்லது. எந்தப் பக்கம் காது குத்தலாம் என்று ஒரு குழந்தையை அழைத்து வந்து என்னிடம் கேட்டார்கள். குழந்தையை நான் பரிசோதித்தபோது காது மடலில் ஒரு சிறு பிரச்சனை இருப்பது தெரிந்தது. அதற்கு ஏற்றவாறு நான் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினேன். சமுதாயம் நம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான சான்று இது. இதுபோன்ற பல நன்மைகள் குடும்ப டாக்டரால் உங்களுக்கு ஏற்படும். அனைவரும் இன்று பிசியாக இருக்கின்றனர். தேவையானவற்றை மட்டும் பரிசோதிப்பது வழக்கமாகிவிட்டது.
குடும்ப டாக்டர் என்கிற முறை இருக்கும்போது குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல்நிலை குறித்தும் அந்த மருத்துவருக்கு தெரியப்படுத்தலாம். இருவருக்குமே அது பலனளிக்கும். ஒருவருடைய நீண்டகால நோய்களை மருத்துவர் அறியும்போது, தற்காலத்தில் அதற்கு ஏற்றவாறு மருந்துகளையும் ஆலோசனைகளையும் அவர் வழங்குவார். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட குடும்ப டாக்டரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். சில சிறிய நோய்கள் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருக்கும் குடும்பங்கள் இருக்கின்றன. குடும்ப டாக்டர் உங்களுக்கு அனைத்து வகைகளிலும் உதவுவார்.