நக்கீரன் நலம் சேனல் வாயிலாக காது, மூக்கு, தொண்டைகளில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை குறித்து டாக்டர் கிங்ஸ்டன் பேசி வருகிறார். அந்த வகையில் அடிநா அழற்சியைப் பற்றி நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
வாயிக்குள் சின்னதாகக் குட்டி நாக்கு போல் இருக்கும் அதற்கு பெயர் உவுலா. இந்த உவுலாவுக்கு இரண்டு பக்கத்தில் ஓவல் வடிவத்தில் அடிநாச் சதைகள் காணப்படும். இதை டான்சில் என்று ஆங்கிலத்தில் அழைக்கின்றோம். உடலின் மிகப்பெரிய நிணநீர்ச் சுரப்பியான அடிநாச் சதைகள் சாப்பிடும்போது வரும் கிருமிகளை தடுத்து அதை அழிப்பதுதான் அதன் முக்கிய வேலை . சில கிருமிகளை அடிநாச் சதைகள் அழிக்கமுடியாவிட்டால் கொஞ்சம் பெரிதாக மாறி அந்த கிருமிகளை அழிக்கும். ஒருவேளை கிருமிகளை அழிக்க முடியாவிட்டால் உடலில் சில காய்ச்சல் போன்ற அறிகுறிகள் வரும். இந்த முழுமையான நிகழ்வை அடிநா அழற்சி என்று சொல்கிறோம்.
அடிநா அழற்சி பொதுவாக குழந்தைகளுக்கு அதிகமாக வரும். பெரியவர்களுக்கு இந்த அடிநா அழற்சி அரிதாகத்தான் வரும். அடிநா அழற்சியைக் கடுமையான அடிநா அழற்சி(Acute), நாள்பட்ட அடிநா அழற்சி(chronic), மீண்டும் வரும் அடிநா அழற்சி(recurring) என மூன்று வகையாகப் பிரித்து சொல்லமுடியும். இதில் நாள்பட்ட அடிநா அழற்சியில் எப்போதுமே குறைந்தபட்ச நோய்த் தொற்று இருந்துகொண்டே இருக்கும். அடிநா அழற்சி இருப்பவர்களுக்கு காய்ச்சல், தொண்டை வலி இருக்கும். அடிநா அழற்சியால் ஏற்படும் தொண்டை வலி பயங்கரமாக இருக்கும். அதனால் உணவு மற்றும் எச்சிலைக்கூட விழுங்க முடியாது. அந்தளவிற்குத் தொண்டைவழி பயங்கரமாக இருக்கும். இரண்டு பக்க காதுக்கு கீழ் நெறிக்கட்டி இருக்கும். அதைத் தொடும்போது பயங்கரமாக வலி இருக்கும்.
குழந்தைகளுக்கு அடிநா அழற்சி வந்துவிட்டால் பசி இருக்காது. உடல் எடை அதிகரிக்காது. அடிநா அழற்சிக்கு சரியான வகையில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் வாய் துர்நாற்றம் மற்றும் டான்சிலை சுற்றி கட்டி உருவாக வாய்ப்பிருக்கிறது. ஸ்ட்ரெப்டோகாக்கால் பாக்டீரியா டான்சிலை பாதித்திருந்தால் கிட்னி மற்றும் இதயம் பாதிப்படைய வாய்ப்பு உள்ளது. இது அரிதான அடிநா அழற்சி. அடிநா அழற்சியை வாயைப் பார்த்தே கண்டுபிடித்துவிடமுடியும். அதற்கென தனியாக டெஸ்ட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வாயை நன்றாகத் திறந்து பார்த்தால் 2 டான்சில்களும் சிவந்த நிலையில் இருக்கும்.
கடுமையான அடிநா அழற்சி(Acute) மற்றும் மீண்டும் வரும் அடிநா அழற்சி(recurring) வகை அடிநா அழற்சியில் அறுவை சிகிச்சை செய்யமாட்டார்கள். இதற்கு என்ன சிகிச்சையென்றால் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். வாயைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மித வெப்பத்தில் இருக்கும் தண்ணீரில் உப்பு போட்டு தொண்டை வரை விழுங்கி வாய் கொப்பளிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். காரமான உணவு எடுத்துக்கொண்டால் டான்சில்களில் எரிச்சலை ஏற்படுத்தும் அதனால் கார உணவுகளைத் தவிக்க வேண்டும். நான் சொன்னதோடு மருத்துவ சிகிச்சையும் கட்டாயம் பண்ண வேண்டும். அடிநா அழற்சி வருபவர்களுக்கு அதிகமான பாதிப்பு இருந்தால் மட்டும்தான் டான்சில்லெக்டோமி என்ற அறுவை சிகிச்சை செய்வார்கள். உதாரணத்திற்கு ஒரு குழந்தைக்கு நாள்பட்ட அடிநா அழற்சி(chronic) வந்தால் அறுவை சிகிச்சை செய்வார்கள். இந்த வகை அடிநா அழற்சி வந்தால் சாப்பிட, தூங்க கஷ்டமாக இருக்கும். அந்தளவிற்கு அடிநா அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தல் மட்டும்தான் அறுவை சிகிச்சை வரை மருத்துவர்கள் போவார்கள். இந்த அறுவை சிகிச்சை மூன்று வயது குழந்தை வரை செய்யலாம் என்றார்.