டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் வழங்குகிறார்
டெங்கு நோயை ஏற்படுத்தும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிடும். தண்ணீரை சரியாக மூடி வைக்காமல் இருப்பதே இதற்கான காரணம். தேங்கி நிற்கும் தண்ணீரில் தான் இந்த கொசுக்கள் உட்காரும். இந்த கொசுக்கள் பெரும்பாலும் காலையில் நம்மைக் கடிக்கும். நாம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் போதாது. பாத்திரங்களையும் நன்கு மூடி வைக்க வேண்டும். பாத்திரங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதையெல்லாம் நாம் செய்தால், கொசு வேறு இடத்தைப் பார்த்து ஓடிவிடும்.
காய்ச்சல் நின்றுவிட்டால் டெங்கு போய்விட்டது என்று அர்த்தமல்ல. காய்ச்சல் என்பது நீங்கள் மாத்திரை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் மூன்று நாட்களுக்கு மேல் இருக்காது. அனைவருக்கும் வரும் காய்ச்சல் போல் தான் இதுவும் ஆரம்பிக்கும். முதல் இரண்டு நாட்களுக்கு காய்ச்சல் அதிகமாக இருக்கும். அதன் பிறகு காய்ச்சல் நின்றுவிடும். அதன் பிறகு உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைக்கு இது ஏற்பட்டால், குழந்தையால் சரியாக சாப்பிட முடியாது. அவர்களுக்கு மிகுந்த உடல் பலவீனம் ஏற்படும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்.
இந்த நிலையில் ரத்தம் இறுகிப் போகும். திரவ நிலையிலிருந்து திட நிலைக்கு ரத்தம் மாறும். இதன்மூலம் இதயத்துடிப்பு அதிகமாகும், ரத்த அழுத்தம் குறைய ஆரம்பிக்கும். இது மிக முக்கியமான ஒரு மாற்றம். இதை நாம் கவனிக்காமல் இருக்கும்போது தான் குழந்தைகளுக்கு மயக்கம் ஏற்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக தட்டணுக்கள் குறைய ஆரம்பிக்கும். உடலின் வெள்ளை அணுக்களும் குறைய ஆரம்பிக்கும். ஹீமோகுளோபின் அளவு அதிகமானது போல் தெரியும். இதைப் பார்த்து ரத்தம் நன்றாக இருக்கிறது என்று நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. ரத்தம் இறுகிப்போவது என்பது அபாயமான ஒரு அறிகுறி. இதைத் தவறான முறையில் புரிந்துகொள்பவர்கள் தான் இன்றும் அதிகம் இருக்கிறார்கள்.