டெங்கு காய்ச்சல் எப்படிப்பட்ட நோய் என்பது குறித்து ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் ராஜேந்திரன் விளக்குகிறார்.
எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை பல நேரங்களில் நாங்கள் நோயாளிகளிடம் இருந்துதான் கற்றுக் கொள்கிறோம். அந்த வகையில் சாதாரண காய்ச்சல் என்று நினைத்து நேரத்தை வீணடிக்கும் பலரை நாங்கள் பார்த்திருக்கிறோம். இதனால் பாதிக்கப்பட்ட நபர் உயிருக்கு போராடும் நிலை கூட ஏற்பட்டிருக்கிறது. இது அனைவருடைய வீட்டிலும் நடக்கக்கூடியது தான். சளி, தொண்டை வலி, காய்ச்சல் ஆகியவை ஏற்படும்போது அதை சாதாரணமாக நாம் கடந்துவிடுகிறோம். தாங்களே தங்களுக்கு மருத்துவராகி மாத்திரை சாப்பிடுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.
அனைத்துக்கும் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. டெங்கு காய்ச்சல் இப்போது பரவலாக அதிகரித்து வருகிறது. தானாகவே சரியாகக் கூடிய நோய்களில் இதுவும் ஒன்று. அதே சமயத்தில், இந்த நோய் மூலம் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கவே செய்கிறது. 95% நோயாளிகளுக்கு தாங்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதே தெரியாது. அவர்களில் பலர் அவர்களாகவே குணமாகியும் விடுகிறார்கள். மீதமுள்ளவர்கள் சீரியசான நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
சில சமயம் இது மரணத்தையே ஏற்படுத்தும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யாருக்கு வேண்டுமானாலும் இது சீரியஸாக மாறலாம். வைரஸை உள்வாங்கிய கொசுக்களால் தான் டெங்கு பரவுகிறது. அது நம்மைக் கடிக்கும்போது அந்த வைரஸை நம் உடலுக்குள் செலுத்துகிறது. அதன் பிறகு வைரஸின் தாக்கம் உடலில் அதிகமாகும். இது தொற்று வியாதி அல்ல. பாதிக்கப்பட்ட நபரைக் கடிக்கும் கொசு இன்னொருவரைக் கடிக்கும்போது அந்த நபரும் பாதிக்கப்படுகிறார். எனவே தொடுவதாலோ அருகில் படுப்பதாலோ இந்த நோய் பரவாது. இந்த நோயை ஏற்படுத்தும் கொசுக்கள் அசுத்தமான சாக்கடைக் கொசுக்கள் அல்ல. இவை நல்ல தண்ணீரில் முட்டையிடும் கொசுக்கள். இவை நல்ல தண்ணீரில் தான் வசிக்கும்.