முந்தைய காலங்களில் இருந்தவர்கள் தான் ஆரோக்கியமாக இருந்தார்கள். இப்பொழுது உள்ளவர்கள் ஆரோக்கியமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. இது மருத்துவக் கூற்றின்படி எந்த அளவிற்கு உண்மை என்ற நம் கேள்விக்கு பிரபல முதியோர் நலம் சிறப்பு மருத்துவர் சசிகுமார் குருநாதன் பதிலளிக்கிறார்.
முந்தைய காலங்களில் உள்ளவர்களை விட இப்போது இருப்பவர்கள் வாழும் காலம் என்பது அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் வாழும் ஆண்டுகள் 40 முதல் 60 வயதிற்குள் முடிந்து விடும். ஆனால் இப்பொழுதெல்லாம் சர்வசாதாரணமாக 70 வயதிற்கு மேல் வாழ்கிறார்கள். நம்முடைய வாழ்வியலில் மாற்றங்கள் இருப்பினும், இப்பொழுது மருத்துவம், அறிவியல் எல்லாம் அடுத்தகட்டத்தில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதனால் இப்பொழுது சிறப்பானதொரு வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
முந்தைய காலங்களில் கேன்சர் போன்ற நோய்களுக்கெல்லாம் மருந்தே கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் வந்தாலே இறந்துவிடுவார்கள் என்ற சூழல்தான் நிலவி வந்தது. ஆனால் இப்பொழுது எல்லா நோய்களுக்குமான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இறப்பின் அளவு குறைந்திருக்கிறது. நோய்களை குணப்படுத்த முடியும், கட்டுக்குள் வைக்க முடியும்.
வெளிநாடுகளில் வயதாகி விட்டாலே தனக்கென்று ஒரு மருத்துவரை அடிக்கடி அணுகி நோய் எதாவது இருக்கிறதா? உணவில், வாழ்க்கை முறையில் என்ன மாற்றங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று பெரும் அக்கறை எடுத்துக் கொண்டு வாழ்கிறார்கள். நம் நாட்டில் வயதானவர்கள் பலர் டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளமாட்டேன். வேறு மருத்துவமுறையை அணுகி நோயை குணப்படுத்திக் கொள்கிறேன் என்று செல்வதுண்டு. ஆனால் வெளிநாடுகளில் மாற்று மருத்துவ மருந்துகளை ஒரு எக்ஸ்ட்ரா காம்ப்ளிமெண்டரியாக எடுத்துக் கொள்வார்களே தவிர அதையே நம்பி இருக்கமாட்டார்கள்.
மாற்று மருத்துவத்தை நோக்கி போகிறவர்கள் அலோபதி மருந்துகளை கெமிக்கல் என்கிறார்கள். கெமிக்கல் என்று எதுவும் தனியாக வந்து விடுவதில்லை, இங்கிருக்கிற பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. அவைதான் மருந்து, மாத்திரை, ஊசிகளாக இருந்து வருகிறது. அவற்றை எல்லாம் அக்காலத்தில் கண்டுபிடிக்கப்படவுமில்லை. அவற்றை இப்போது கண்டறிந்து பயன்படுத்தப்படுவதால் இறப்பின் விகிதம் குறைந்து இப்பொழுது உள்ள மக்கள் தான் நீண்ட காலம் வாழ்கிறார்கள்.