வயதான காலத்தில் தூக்கமின்மை சிக்கல் வருகிறதென்று மருத்துவர் பரிந்துரையின் பேரில் தூக்கமாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள். இதற்கு வேறு ஏதாவது மருத்துவ அறிவுரை இருக்கிறதா? என்பதைப் பற்றி முதியோர் நலம் சிறப்பு மருத்துவர் சசிகுமார் குருநாதன் விளக்குகிறார்.
பெரும்பான்மையான மருத்துவர்கள் நோயாளிகளின் கட்டாயத்தில் பேரில் தான் தூக்க மாத்திரையை பரிந்துரைக்கிறார்களே தவிர நாங்கள் கொடுக்க மாட்டோம். தூக்கத்திற்கான இயற்கையான வழிமுறைகளேயே பரிந்துரைப்போம். மன அழுத்தம் பல்வேறு வகைகளில் இருக்கும், அப்படியானவர்கள் திடீரென இரவில் தூக்கமில்லாமல் எழுந்து உட்கார்ந்து கொள்வார்கள், அதை முதலில் சரி செய்ய சிகிச்சை அளிக்கும் போது தூக்க சுழற்சி சரியாகும்.
தூங்கும் முன் காபி குடித்தால் தூக்கம் வராது, தூங்கும் முன் நிறைய செயல்பாடுகளை தவிர்த்தல் நலம். குறிப்பாக போன் பார்ப்பது, டிவி சீரியல்களை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டே இருப்பது, இரவு தாமதமாகி சாப்பிடுவது போன்ற செயல்பாடுகளெல்லாம் தூக்கமின்மையை உருவாக்கும்.
தூக்க மாத்திரை குறைந்த கால தீர்வாக எடுத்துக் கொண்டு, முறையான மருத்துவ சிகிச்சையை செய்து சரிசெய்து கொண்டு, பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டு தூக்க மாத்திரையை தூக்கத்திற்காக பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்தி விட வேண்டும். அது பழக்கமாக மாறும் பட்சத்தில் அதுவே நோயாகவும் ஆகக்கூடும்.
வயதானவர்களுக்கு மரணம் குறித்த பயத்தாலும் தூக்கம் வராமல் கஷ்டப்படுவதாக வெளிநாடுகளில் ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் வயதான காலத்தில் தீவிரமான ஆன்மீக சிந்தனை பலரை அதிலிருந்து வெளியே கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. எனவே தூக்கமாத்திரை எடுத்துக் கொள்வது என்பது தற்காலிக தீர்வே, அது நிரந்தர தீர்வல்ல. தூக்கம் வராமல் தவிக்கின்ற வயதானவர்கள் முறையாக மருத்துவரை அணுகி தங்களுடைய மனம், உடல் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்து கொள்ள வேண்டுமே தவிர, தூக்க மாத்திரை சாப்பிட்டால் தான் தூக்கம் வரும் என்று ஆகி விடக்கூடாது, அது ஆரோக்கியமானதல்ல.