வாதம், பித்தம், கபம் உடலமைப்பினர் எப்போது மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.
காற்று, வறட்சி, கடினம் போன்ற மூன்று குணங்களை கொண்டவர்கள் வாத உடலினர். எனவே அதற்கு எதிரான உணவு வகைகளை எடுத்து கொள்ளவேண்டும். வறட்சி இல்லாத கொழகொழப்பான, வெதுவெதுப்பான, இலகுவான பதமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே இவர்கள் வெறும் வயிற்றில் நெய் எடுத்துக் கொள்ள நல்ல பலன் கொடுக்கும். எண்ணெய் குறைப்பது என்பது இவர்களுக்கு ஏற்காது. அதே போல இவர்கள் கடினமான பொறித்த வேகவைத்த உணவு வகைகளை எடுத்து கொள்ளக்கூடாது.
நீர் டயட், பச்சை காய்கறி டயட் போன்ற உணவு முறை வாத தேகத்தினருக்கு ஒத்துவராது. பழுக்காத துவர்ப்பான காய் பழவகைகள் தவிர எல்லா பழங்களும் இவர்களுக்கு ஒத்து வரும். அப்படி பழுக்காத, துவர்ப்பான, பழத்தை எடுக்கும்போது உப்பு சேர்த்து சாப்பிடலாம். பொதுவாகவே அவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும். எனவே அவர்கள் உணவில், உப்பு, புளிப்பு, இனிப்பு வகைகள் எடுத்துக்கொள்ளலாம். இவர்களுக்கு எல்லா வகை அரிசி உணவுகளும் ஏற்று கொள்ளும். குறிப்பாக பச்சரிசி வெப்பத்தை சிறிது தரக்கூடியது என்பதால் பச்சரிசி கஞ்சி, பொங்கல் என வைத்து சாப்பிடுவது ஏற்று கொள்ளும். சிறுதானியத்தை பொறுத்தவரை தினை, கம்பு, கேழ்வரகு போன்றவை இவர்களுக்கு தோல் வியாதிகளை கொடுக்கும் என்பதால் தவிர்க்க வேண்டும்.
நீர் எடுத்துக்கொள்வதில் கூட ஒவ்வொரு தேகத்தினருக்கும் அளவு மாறுபடும். வெதுவெதுப்பான நீர் மட்டுமே வாத தேகத்தினர் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்டெர்மிடியேட் பாஸ்டிங் போன்ற ஒருவேளை உணவைத் தவிர்க்கும் டயட் வகை வாத தேகத்தினருக்கு மட்டுமே ஒத்து வரும். இவர்கள் இந்த டயட்டை ஒரு மூன்று மாத கால எடுக்கும்போது தானாகவே பசி ஏற்பட்டு பித்த உடலாக மாறும். அந்த சமயம் டயட்டை உடனடியாக கைவிட்டு விட வேண்டும். தமிழ் மருத்துவ முறையை பொறுத்தவரை வாத உடலினர் உணவுக்கு முன் மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். பித்த உடலினர் உணவோடு சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். கப உடலினர் உணவுக்கு அரைமணி நேரம் பின் எடுக்க வேண்டும். அதே போல வாத உடலினர் சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பு நீர் குடித்து விட்டு , பின்னர் சாப்பிடவேண்டும். பசியை தூண்ட சூப் எடுத்துக்கொள்ளுதல் இவர்களுக்கு ஒத்து வரும். அதுவே பித்த உடலினருக்கு வயிற்று புண் வந்து அல்சரை ஏற்படுத்தும்.
எனவே வாத உணவின் சாப்பிடும் போது இடையில் நீர் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் தொப்பை போடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. உணவுக்கு பின் சூடான பானங்கள் குடிக்கும் பழக்கம் இவர்களுக்கு ஒத்து வரும். வெறும் வயிற்றில் நெய், இஞ்சி சாறு, நீராகாரம் போன்றவை வாத உடலினருக்கு கண்டிப்பாக ஒத்து வரும். இஞ்சி சாறும் சரியான முறையில் எடுக்க வேண்டும். இஞ்சியை கட்டாயம் தோல் சீவி ஒரு துண்டு எடுத்து நீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அடித்து அதை அப்படியே அரைமணி நேரம் தெளிய வைக்க அடியில் மாவு போல படியும், அதை தவிர்த்து மேலாக தெளிவு நீரை மட்டும் எடுக்கவேண்டும். கூட சேர்த்து கொள்ளலாம். துவர்ப்பான பானங்கள் குறிப்பாக டீ வகைகள் , க்ரீன் டீ , பிளாக் டீ போன்றவை வாத உடலினர் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.