மழைக் காலங்களில் பரவக்கூடிய பல்வேறு வகையான காய்ச்சலைப் பற்றி நமக்கு ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேந்திரன் விளக்குகிறார்.
இன்றைய காலத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு தவிர மற்றுமொரு கவனிக்கப்பட வேண்டிய காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் ஆகும். ஸ்வைன் ப்ளூ ஹெச்1 என் 1 இன்புளுயன்சா வைரஸ், இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவக் கூடியது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவரை கடித்த கொசு மற்றவரை கடிக்கும்போது அதனால் பரவக்கூடியது டெங்கு காய்ச்சல்.
ஆனால் பன்றிக் காய்ச்சல் என்பது பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வருகிற மூச்சுக்காற்று, இருமல், சளி ஆகியவற்றாலும், கை, கால் ஆகியவற்றைக் கொண்டு எங்கெல்லாம் தொடுகிறோமோ அதன் மூலம் பரவக்கூடிய தன்மையைக் கொண்டது.
பன்றிக் காய்ச்சல் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் தீவிரமான உடல் சூட்டோடு காய்ச்சல், உடல் வலி, வரட்டு இருமல், கடுமையான தலைவலி, தொண்டை வலி ஏற்படும். மருத்துவர்கள் தொண்டை வலி என்றதும் தொண்டையை பரிசோதித்துப் பார்ப்பார்கள். ஆனால் அங்கே வலியால் வீங்கியோ அல்லது சிவந்து போயோ இருக்காது இப்படியாக எந்த அறிகுறிகளுமே இல்லாமல் கடுமையான தொண்டை வலி ஏற்பட்டால் அது பன்றிக் காய்ச்சல் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
நோயின் தீவிரத்தன்மையை அறியாமல் சாதாரண காய்ச்சல்தான் என்று வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போட்டுக் கொண்டு சாதாரணமாக இருந்து விடக்கூடாது. தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டால் சுவாசப் பாதையிலிருந்து நுரையீரலை நோக்கி காய்ச்சல் நகரக்கூடும் இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும்.
பன்றிக் காய்ச்சல் என்றதும் நாங்கள் பன்றிக்கறி எதுவும் சாப்பிடவில்லையே, பன்றியிடம் அருகில் எதுவும் போகவில்லையே என்று நினைப்பார்கள். அது காய்ச்சலை வேறுபடுத்த வைக்கப்பட்ட பெயராகும். காய்ச்சலின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ள பரிசோதனை செய்து உறுதிசெய்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையையோ, மருத்துவரையோ அணுகி முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.