நைட் சிப்ட் வேலையை இன்றைய காலத்தில் பலர் செய்கிறார்கள். இதனால் என்னவெல்லாம் மனச்சிக்கல் உருவாகிறது என்ற கேள்வியை மனநல மருத்துவர் ராதிகா முருகேசனிடம் முன் வைத்தோம். அவர்கள் அளித்த விளக்கம் பின்வருமாறு.
இயல்பாக காலை வேலைக்கு போய்விட்டு மாலை வீடு திரும்புகிறவர் என்ன செய்வார் என்றால் மாலை கொஞ்சம் புத்துணர்ச்சியாகி விட்டு மனைவியோடு நேரம் செலவழித்து டிவி பார்த்து சாப்பிட்டு தூங்குவார். ஆனால் இரவு வேலை செய்கிறவர்கள் அப்படியில்லை, இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் தூங்குகிறவர்கள் ஒழுங்காக நேரத்திற்கு எழுந்து சாப்பிடக்கூட மாட்டார்கள். மீண்டும் இரவு வேலைக்கு கிளம்ப வேண்டும் அதற்கு கொஞ்சம் தூக்க ஓய்வு வேண்டும் என்ற நினைப்பு மட்டுமே இருக்கும்.
இல்லற வாழ்க்கையை புதிதாக ஆரம்பித்த நைட் சிப்ட் வேலை பார்க்கிற ஒருவர் பகலையே பார்த்தது இல்லை என்றார். சிலர் இரவு வேலை முடிந்து காலையில் தூக்கம் வராமல் இருப்பதால் ஆல்கஹால் எடுத்துக் கொள்ளுகிற நிலைக்கு ஆளாவார்கள். போதையில் தூங்கி விடுவதை வழக்கமாக வைத்துக் கொள்கிறவர்களுக்கு ஒரு சமயம் இயல்பான தூக்கமும் கெட்டுப்போய் விடும்.
குழந்தைகளோடும், மனைவியோடும் நேரம் செலவழிக்க முடியாமல் போவதால் குடும்பத்தில் சிக்கல் உருவாகும், வேலையிலும் கொஞ்சம் கொஞ்சமாக கவனம் சிதறும். இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால் கண்ணில் சிக்கல், உடல் நோய்வாய்ப்படுதல் எல்லாம் உருவாகும். உடலும், மனமும் ஒன்றையொன்று தொடர்புடையது. அதனால்தான் தூக்கம் வராமல் இருப்பவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய மனநல ஆலோசகரே சொல்வார்கள்.
மேலும். நல்ல ஆரோக்கியமான உணவு, வெதுவெதுப்பான நீரில் குளியல், மசாஜ் செய்து கொள்ளுதல், நீண்ட தூரம் அமைதியான பயணம், அன்பானவர்களுடன் இருத்தல் போன்றவை உங்களுக்கு மன அமைதியைத் தரும், அதனால் தூக்கம் வரும். ஆரோக்கியமான வாழ்விற்கு ஒருவர் 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். இரவு வேலையை தவிர்க்கவே முடியாவிட்டால் அதனை ஈடு செய்யும் விதமாகத் தூங்க வேண்டும். அதை அவரவர் சாத்தியப்படுத்துகிற சூழலுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மனநல ஆலோசகரை அணுகி வாழ்வியல் முறை மாற்றங்களை சொல்லி அதற்கு தகுந்த உடற்பயிற்சி, உணவு முறை மாற்றங்களைக் கேட்டு பின்பற்ற வேண்டும்.