உளவியல் தன்மை கொண்ட பல்வேறு வகையான தகவல்களைப் பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் திருமணத்தை மீறிய உறவின் பின்னணியில் இருக்கும் உளவியலை விளக்குகிறார்.
கள்ளக் காதலை முதலில் திருமணத்தை தாண்டிய உறவு என்று சொல்வது சரியாக இருக்கும். கள்ளக் காதலுக்காக கணவனையும் மனைவியும் கொல்லப்படுவது என்பது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது இப்பொழுது தான் அதிகமாக செய்திகளில் வெளியே வருகிறது. சமூகத்தில் விவாகரத்தை இயல்பாக பார்ப்பதில்லை. பெண்கள் பெரும்பாலும் கணவன், குழந்தைகள் தன்னுடைய காதலுக்கு தடையாக இருப்பதால் அந்த ஒரு நொடியில் ஏற்படும் கட்டுப்பாட்டை மீறின கிளர்ச்சியால் இப்படி விபரீத முடிவுகளை எடுக்கின்றனர். இதை சமூகத்தோடு பொருத்திப் பார்த்தால் புரிந்துகொள்ள முடியும். எல்லாரும் இதுபோல செய்வதில்லை. வேறொரு உறவு இருந்தாலும் கூட தன்னுடைய மனைவி அல்லது கணவனை, குழந்தைகள் என குடும்பத்தை முன்னிலைப்படுத்துவார்கள். இதிலிருந்து எப்படி வெளியே வர முடியுமோ அதற்கான வழிகளை செய்து தானே தெளிவாக விலகி விடுவர். ஆனால் எங்கு ஒரு கசப்பான திருமண உறவு இருக்கிறதோ அங்கு தான் இதுபோன்று கொல்லும் அளவிற்கு மனநிலையில் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்று செய்பவர்கள் நிலையான மனநிலையிலும் இருக்கமாட்டார். ஒருவித மனநோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பர்.
தனக்கென்று ஒரு மதிப்பில்லை, திருமணம் வேலை செய்யவில்லை அல்லது பொருளாதார ரீதியாக சுதந்திரம் இல்லை என்ற விரக்தியில் கிடைத்திருக்கும் வேறொரு உறவை ஒரு அழகான தப்பிக்கும் வாய்ப்பாக பார்க்கின்றனர். இதுபோன்ற நிலை வருவதற்கு முன்னர் எவ்வளவோ நடந்திருக்கும். ஆனால் வெளியே செய்தியாக வரும்போது அது தெரிவதில்லை. ஒருவர் மட்டுமே குற்றவாளியாக பார்க்கிறோம். தற்போது பெரும்பாலும் பெண்களே அதிகமாக இதில் ஈடுபடுகிறார்கள். பொதுவாக நம்முடைய சமூகம் மோனோகெமி என்ற உறவுமுறை சார்ந்தது. இது இனச் சேர்க்கையை சார்ந்து இல்லாமல் சமூகம் சார்ந்தே இருக்கிறது. ஆனால் நிறைய ஆய்வுகளில் மனிதனின் இயற்கையான உள்ளுணர்விற்கு போலிகாமி என்ற உறவுமுறை தான் சரியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஆரோக்கியமான உறவில் கூட இதுபோன்ற ஈர்ப்பு ஏற்படும். ஆனால் அவர்கள் திருமண உறவை முன்னிலைப்படுத்துவார்கள். சர்வதேச அளவில் கூட இதுபோன்ற திருமணம் தாண்டிய உறவுக்கென்றே செயலி கூட இருக்கிறது. அதை 2 மில்லியன் இந்திய பயனாளிகள் பயன்படுத்துவதில், 60 சதவிகிதம் அதை பெண்களே உபயோகம் செய்கிறார்கள். நம் நாட்டில் ஐந்து சதிவிகிதம் மட்டுமே காதல் திருமணம் நடக்கிறது. இப்படி இருக்கையில் இன்றைய சமூக மாற்றத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு ஒன்றுமே தெரியாத உறவில் நிலைத்து இருப்பது என்பது சாத்தியம் குறைவாக இருக்கிறது. ஈர்ப்பும் குறைகிறது. திருமணம் ஆகி வெறும் தாய் மற்றும் ஒருவருக்கு மனைவி அடையாளம் தவிர ஒன்றுமில்லாமல் தனக்கான தேவைகள் எதுவும் அந்த திருமணத்தில் நிறைவேறாத போதும் தன்னுடைய சுயமதிப்பை இழக்கும் போது தான் தனக்கென்று தேவையை நோக்கி செல்லும்படி ஆகிறது. மேலும் அதற்கான வழிகளை இன்றைய இணைய வசதிகள் சுலபப்படுத்தி விடுகின்றன.
ஆண்களை விட பெண்களே இதுபோன்ற விஷயத்தில் தள்ளப்பட காரணம், அவர்களின் உணர்வுகளை அதிகமாக பொருட்படுத்தாததுதான். ஆண்களை விட மன அழுத்தம் பெண்களுக்கு இருமடங்கு இருக்கும். உதாரணமாக உடல்நிலை சரி இல்லை என்று வெளியே சொன்னாலும் கூட அவர்கள் பலவீனமானவர்கள் என்று உதாசீனப்படுத்துவது என்பது நடக்கிறது. இதனால் தான் எங்கு நம் எமோஷனல் தேவைகள் பூர்த்தி ஆகிறதோ அங்கே அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அதுதான் அவர்களை வீட்டை விட்டு வெளியே வரவைப்பது மற்றும் குடும்பத்தை கொல்ல வைக்கும் அளவுக்கு எல்லை தாண்டிய முடிவுகளை எடுக்க வைக்கிறது.