வாழ்வியல் மாற்றமும், தூக்கமின்மையும் மன அழுத்தத்திற்கு எவ்வாறு பங்கு விளைவிக்கிறது என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.
இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் தனி மனிதனுக்கு மன அழுத்தம் கொடுக்கத்தான் செய்கிறது. முந்தைய காலத்தில் வேலை பார்க்கும் நடைமுறையே நன்றாக இருந்தது. அலுவலகத்தில் கூட வேலை பார்ப்பவர்களுடன் இருக்கும் உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகே அது அப்படியே மாறி விட்டது. தனித்து வேலை பார்க்கும் சூழலில் நிறைய சிக்கலும் இருக்கிறது. மேலும், அலுவலகத்திலும் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. வழக்க நேரத்திற்கும் அதிகமாக வேலை பார்க்கும்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது. உணவு முறை, சரியான உடற்பயிற்சி இல்லாமை போன்றவை டிப்ரெஷன் அதிகமாக காரணமாகிறது. வெளிநாடுகளில் தற்போது நிறைய ஆரோக்கிய மாற்றங்களை கொண்டு வந்து விட்டனர். பள்ளி அருகே பாஸ்ட் புட் கடைகளை வைக்க அனுமதிப்பதில்லை.
நம் நாட்டில் டாஸ்மாக்கிற்கு காட்டும் எதிர்ப்பை இந்த ஜங்க் ஃபுட் கடைகளுக்கு காட்டுவதில்லை. ஜங்க் ஃபுட் உணவுகள் ஆரோக்கியமற்ற உடல்நிலையை கொண்டு வரும். தூக்கமற்ற சூழலும் மன அழுத்தத்திற்கு பெரும்பங்கு இருக்கிறது. குழந்தைகள் 16 மணி நேரம் உறங்கவேண்டும் என்றால் பெரியவர்கள் 6-7 மணி நேரம் தூங்குதல் அவசியம். இது போன்று குவாலிட்டி ஸ்லீப் பாதிக்கும் போது 'பிரைமரி இன்சோம்னியா' வருகிறது. நெடு நேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருப்பதால் உடனடியாக தூக்கத்திற்கு உடல் ஒத்துழைப்பதில்லை. நம் இயல்பு காலையில் விழித்து இரவில் தூங்க வேண்டும். அப்பொழுது தான் சரியான ஹார்மோன்ஸ் இயங்கி நம் உடல் சரியாக பராமரிக்கும்.
ஆனால் இன்றைய சூழலில் உடல்நிலைக்கு எதிராக இரவில் வேலை பார்த்து பகலில் தூங்குகிறார்கள். இப்படியான சூழல் வரும் போது தான் உடல் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அன்றைய காலத்தில் 'இன்சோம்னியா' என்ற நோயே கிடையாது. இன்றைய காலத்தில் குழந்தைகள் கூட பெற்றோர்களின் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இரவு ஒரு மணி வரை கூட விழித்து மொபைல் பார்க்கிறார்கள். குறைந்த வயதில் டிப்ரெஷன் வர இதுவும் ஒரு காரணம் தான். உணவுமுறை மாற்றம், இனிப்பு வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது, சரியான அளவில் நீர் பருகாமல் இருப்பது கூட இதுபோன்ற இன்னல்களை வரவைக்கிறது.