குழந்தைகளை அடித்து வளர்க்கலாமா என்ற கேள்விக்கு பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் பதிலளிக்கிறார்.
முன்பெல்லாம் குழந்தைகள் தவறு செய்யும்பொழுது அடித்து திருத்துவது இயல்பாக இருந்தது. இப்பொழுது அந்த நிலை மாறி இருந்தாலும் வேறு வழிகளில் அவர்களை திருத்தி முறைப்படுத்தலாம். உதாரணத்திற்கு வாரம் முழுக்க வீட்டுப்பாடம் செய்தால் ஸ்டார் கொடுத்து 10 ஸ்டார்ஸ் வாங்கும்போது பிடித்த சினிமாவிற்கு கூட்டி செல்வது, பிடித்த சாக்லேட் வாங்கி கொடுப்பது என்று அவர்களை நெறிப்படுத்தலாம். தவறுகள் செய்யும்போது ஓரிரண்டு நாள் பாக்கெட் மணி கட் செய்வது, மொபைல் போன் தடை செய்வது போன்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். ஆனால் யாரையுமே அடிப்பது என்பது தவறு. அது ஒருவகை தண்டனை தான். அது அவர்களின் சுய நம்பிக்கையை இழக்க செய்யும்.
குழந்தைகளும் ஒருவித கவலை உணர்விலிருந்து வெளி வரவே மொபைல் போன் மீது சார்ந்து இருக்கிறார்கள். ஒரு தவறான விசயம் எந்தளவு அடிமைப்படுத்துகிறதோ அந்த அளவு மொபைல் திரையை பார்ப்பதில் அவர்களுக்கு ஏற்படுகிறது. இது டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் என்று பல்வேறு மன நோய்களை கொடுக்கிறது. இது கூடவே சரியான உணவு பழக்கமும் தூக்கமுமின்றி வேலை பார்க்கும் இளைஞர்களையும் கூட சேர்த்து பாதிக்கிறது. டைப் 2 டயாபெட்டீஸ் நோய் தாக்குமளவு இருக்கிறது. இதற்கு தீர்வாக குழந்தைகளிடம் குடும்பமாக சேர்ந்து நேரம் ஒதுக்கி பிடித்த படம் பார்ப்பது, விளையாடுவது போன்று நேரம் செலவழிக்கலாம். ஆனால் இன்றைய தினங்களில் பெற்றோர்களும் வேலை பார்ப்பதால் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிவதில்லை.
மொபைல், இன்டர்நெட் அடிமை ஆனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் நிலையில் இருக்கிறது. ஆல்கஹால் கூட வாங்காமல் தடுத்து ஒரு வகையில் முழுமையாக நிறுத்த முடியும். இதுவே மொபைல் என்று வரும்போது அவர்களின் தினசரி தேவைக்கும் அது அத்தியாவசியமாக இருப்பதால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது என்பது கொஞ்சம் சிரமம் தான். மிக குறைந்த நேரத்தில் மகிழ்ச்சியை கொடுப்பதால் தான் போன் பார்ப்பது என்பது எளிதாக இருக்கிறது. இதுவே ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நிறைய நேரம் ஒதுக்கவேண்டும். எனவே இதுபோல பள்ளிகளிலும் போன் பயன்படுத்தாமல் இருக்கவென்று நாட்கள் ஒதுக்கி வேறு விதமான பயிற்சிகளை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். மன நிம்மதிக்காக போன் பார்க்கும் நிலையிலிருந்து மாற வேறு விதமான ஃபன் ஆக்டிவிட்டிகளில் ஈடுபடலாம்.