வெண்குட்டம் என்ற தோல் நோய் குறித்தும், அதன் சிகிச்சை முறைகள் குறித்தும் சித்த மருத்துவர் லட்சுமி கீதா விரிவாக விளக்குகிறார்
ஒவ்வாத உணவுகளை நாம் எடுத்துக்கொள்வதாலும், ஆடைகள் உள்ளிட்ட வெளிப்புற காரணங்களாலும் கரப்பான் என்கிற தோல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அந்த நேரத்தில் தோல் தடிமனாக மாறிவிடும். கருமையான நிறத்துக்கு தோல் மாறும். அதிலிருந்து நீர் வடியும் தன்மையும் காணப்படும். இதற்கு சித்த மருத்துவத்தில் கரப்பான் தைலம் என்கிற மிகச்சிறந்த மருந்து இருக்கிறது. திரிபலா சூரணம் என்கிற மருந்தை உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் பயன்படுத்தலாம். இது காயகல்ப சூரணம் என்று அழைக்கப்படுகிறது.
எந்த ஒரு நோய்க்கும் ஆட்படாமல் உடலைக் கல் போன்று வைத்து பாதுகாத்து, மிகச் சிறப்பான முறையில் வைத்திருக்க திரிபலா சூரணம் உதவும். நோயால் தாக்கப்பட்ட ஒரு நோயாளியை தாயை விட சிறப்பாக கவனித்துக்கொள்ளும் தன்மை கொண்டது திரிபலா சூரணம். குளிக்கும்போது நாம் இதைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நீர் வடிதல் என்பது முற்றிலுமாக நீங்கும். இயல்பான நிறத்துக்கு உங்களுடைய தோல் மாறும். கத்திரிக்காய், மீன், கருவாடு, கோழி, பாகற்காய் உள்ளிட்டவற்றை சாப்பிடும்போது சிலருக்கு அரிப்பு ஏற்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.
கரப்பான் நோயாளிகள் உடலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இதன் மூலம் நோயிலிருந்து விரைவில் விடுபடலாம். உடலில் முன்னங்கை, முன்னங்கால், பாதம், நெற்றி, கன்னம் ஆகிய பகுதிகளில் கரப்பான் நோயின் பாதிப்புகள் பெரும்பாலும் இருக்கும். குளிக்கும்போது திரிபலா சூரணம் பயன்படுத்துவதால் அரிப்புகள் நீங்கும். சோப்புக்கு பதிலாக கடலை மாவு பயன்படுத்தலாம். தகுந்த சித்த மருத்துவரை நீங்கள் அணுகினால் உங்களுக்கான சிறந்த மருத்துவம் கிடைக்கும். கரப்பான் நோயிலிருந்து வெளிவருவதற்கான சிறந்த தீர்வுகள் கிடைக்கும்.
வெண்குட்டம் என்கிற நோயும் பலருக்கு இருக்கிறது. இது குணப்படுத்த முடியாத நோய் என்று சித்தர்கள் சொன்னாலும், இதை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். இது ரத்தத்தில் இரும்புச் சத்து குறைவதால் வரக்கூடிய நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரும்புச்சத்து கொண்ட உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கைக்கீரை, பேரீச்சம்பழம் ஆகியவற்றை உண்ண வேண்டும். முக்கியமாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் பீட்ரூட் சாப்பிட வேண்டும். இதன் மூலம் உடல் மீண்டும் இயல்பான நிறத்துக்கு மாறும்.
கார்போக அரிசியும் சித்த மருத்துவத்தில் இதற்கான தீர்வாக பார்க்கப்படுகிறது. கார்போகி தைலத்தை வெண்குட்ட புள்ளிகளின் மீது தடவும்போது படை மறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. கார்போகி மாத்திரைகளும் கிடைக்கின்றன. உடல் கிருமிகள் அதிகம் இருப்பதால் ஏற்படும் இந்த நோயை நிச்சயம் நம்மால் கட்டுப்படுத்த முடியும்.